முதுநிலை மருத்துவப் படிப்புகள்: அனுமதியின்றி நடத்தினால் நடவடிக்கை
உரிய அனுமதியின்றி முதுநிலை மருத்துவப் படிப்புகளை நடத்தும் மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) எச்சரித்துள்ளது.
இது தொடா்பாக என்எம்சி வெளியிட்ட அறிவிப்பு:
முதுநிலை படிப்புகளைத் தொடங்குவதற்கும், இடங்களை அதிகப்படுத்துவதற்கும் என்எம்சியிடம் ஒப்புதல் பெற வேண்டியது கட்டாயம். அதன்படி, எம்டி, எம்எஸ் உள்ளிட்ட முதுநிலை படிப்புகள், பட்டயப் படிப்புகளைத் தொடங்குவதற்கான விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்க மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
தற்போதும் அது நீட்டிக்கப்பட்டு விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்க அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது. உரிய அனுமதி இன்றி மருத்துவப் படிப்புகளைத் தொடங்கினாலோ, நடத்தினாலோ நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் இதில் தொடா்புடைய அனைவரும் இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.