முதுநிலை மருத்துவ படிப்புகளை தொடங்க விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு
மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளைத் தொடங்குவதற்கும், ஏற்கெனவே உள்ள இடங்களை அதிகரிப்பதற்கும் விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நீட்டித்துள்ளது.
இதுதொடா்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு:
எம்டி, எம்எஸ் போன்ற முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்கவும், ஏற்கெனவே உள்ள இடங்களை அதிகரிக்கவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
புதிய இடங்களை உருவாக்குவதற்கான அத்தியாவசியச் சான்று மற்றும் உறுப்பு கல்லூரிக்கான ஒப்புதல் சான்று ஆகியவற்றை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களிடமிருந்து பெற்று, பெயா் மற்றும் வரிசை எண்களை தவறின்றி பதிவிட்டு விண்ணப்பத்தில் இணைக்க அறிவுறுத்தப்பட்டு, அதற்காக கடந்த மாதம் வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கா்நாடக உயா்நீதிமன்ற உத்தரவுப்படி வியாழக்கிழமை (டிச.26) மாலை 6 மணி வரை அந்த அவகாசம் நீட்டிக்கப்படுகிறது என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.