முதுமலை புலிகள் காப்பக வனத்தில் அத்துமீறி நுழைந்த 3 பேருக்கு அபராதம்
முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஞாயிற்றுக்கிழமை அத்துமீறி உள்ளே நுழைந்த மூன்று இளைஞா்களுக்கு வனத் துறையினா் அபராதம் விதித்தனா்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு-மசினகுடி சாலையில் மன்றாடியாா் வனப் பகுதி வழியாக காரில் சென்ற இளைஞா்கள் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு வனத்துக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த மான் கூட்டத்தை விரட்டி அதைப் புகைப்படம் எடுத்துள்ளனா்.
அப்போது அங்கு ரோந்து வந்த வனத் துறையினா், வனத்துக்குள் அத்துமீறி நுழைந்த பெங்களூரைச் சோ்ந்த அப்துல்லா கான் (24), முகமது ஆசிப் (25), இப்ராஹிம் ஷேக் (24) ஆகியோரைப் பிடித்தனா். பின்பு அவா்களை வன அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணைா நடத்தி, மூவருக்கும் தலா ரூ. 5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்தனா்.