Investment Scam: ஆளுக்கு ரூ.50 லட்சம்; ரூ.1500 கோடி இழந்த பெருநகர பணக்காரர்கள்!
மும்பை: 'அனகோண்டா குட்டிகள், உடும்புகள், ஆமைகள்' - தாய்லாந்திலிருந்து கடத்தி வந்த பெண் கைது
வெளிநாடுகளிலிருந்து அபூர்வமான விலங்குகள் இந்தியாவிற்கு அடிக்கடி கடத்தி வரப்படுவது வழக்கம். இந்த விலங்குகள் வளர்ப்புப் பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன.
இவ்வகையில், மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தாய்லாந்து நாட்டிலிருந்து வந்த மும்பை தானே பகுதியைச் சேர்ந்த சரீன் அஸ்லாம் ஷேக் என்ற பெண்ணின் சூட்கேஸை சுங்கவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தனர். அந்தச் சூட்கேஸில் பிரத்யேக கண்டெய்னர்களில் அபூர்வ வகை விலங்குகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது.
உடும்புகள், ஆமைகள், அனகோண்டா பாம்பு குட்டிகள் மற்றும் பிற பல்லி இனங்கள் உள்ளே இருந்தன. வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்க்க வெளிநாட்டு விலங்குகளுக்கு அதிக வரவேற்பு இருப்பதால் இது போன்ற விலங்குகள் கடத்தப்படுவது அதிக அளவில் நடந்து வருகிறது.

தாய்லாந்திலிருந்து விலங்குகளைக் கடத்தி வந்த பெண் கைது செய்யப்பட்டார். அவர் மீது வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வனவிலங்குகளை மீட்கும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அந்த விலங்குகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அவற்றை முழுமையாகச் சோதித்த பிறகு சர்வதேச வனவிலங்குகள் சட்டப்படி தாய்லாந்திற்கே மீண்டும் அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடத்தி வரப்பட்ட விலங்குகள் அனைத்தும் மிகவும் சிறிய பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தன என்றும், அவை மூச்சுத்திணறி உயிரிழக்கும் அபாயம் இருந்தது என்றும், வன விலங்குகள் நல ஆர்வலர் பவன் சர்மா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ''அனகோண்டா பாம்பு இனங்கள் கடத்தப்படுவது மிகவும் அபூர்வம். வனவிலங்கு மோசடி செய்பவர்கள் இந்த வெளிநாட்டு விலங்குகளை செல்லப் பிராணி வர்த்தக சந்தையில் லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்கிறார்கள். இந்தியர்கள் இதுபோன்ற வெளிநாட்டு இனங்களை வாங்குவதை நிறுத்த வேண்டும்" என்றும் தெரிவித்தார்.
மொத்தம் 154 விலங்குகள் கடத்தி வரப்பட்டு இருந்தன. அதில் நான்கு அனகொண்டா குட்டிகள் இருந்தன.
அனகோண்டாக்கள் நீரிலும், நிலத்திலும் வாழக்கூடியவை. அதற்கு விஷம் கிடையாது. ஆனால் அவை உலகின் மிக நீளமான மற்றும் கனமான பாம்புகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. அவை தான் சாப்பிடும் விலங்குகளின் இரத்த ஓட்டம் துண்டிக்கப்படும் வரை அவற்றை அழுத்தி இரையைக் கொன்று, பின்னர் அவற்றை முழுவதுமாக விழுங்குகின்றன.

















