கேரளா: "வேலையை விடும் திட்டமில்லை" - லாட்டரியில் ரூ. 25 கோடி வென்ற பிறகும் வேலைக...
மும்பை: "ஒரே மகளை இழந்துவிட்டோம்" - 19வது மாடியில் இருந்து சிமெண்ட் பிளாக் விழுந்து இளம்பெண் பலி
மும்பை மேற்கு பகுதியில் உள்ள ஜோகேஸ்வரி என்ற இடத்தில் வசித்து வந்தவர் சன்ஸ்ருதி அமின் (22). இப்பெண் தனியார் வங்கி ஒன்றில் வேலை செய்து வந்தார். அவர் தனது வீட்டிலிருந்து கிளம்பி வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது அவரது வீட்டிற்கு அருகில் புதிதாகக் கட்டப்பட்டுக்கொண்டிருந்த கட்டிடத்திலிருந்து சிமெண்ட் பிளாக் ஒன்று அவர் மீது விழுந்தது.
சிமெண்ட் பிளாக் சன்ஸ்ருதியின் தலையில் விழுந்ததால் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். அவரைச் சூழ்ந்து பொதுமக்கள் நின்றுகொண்டிருந்தனர். அந்நேரம் சன்ஸ்ருதியின் தந்தை அனில் தனது வீட்டில் இருந்து வெளியில் வந்தார்.
அவரது வீட்டில் இருந்து சற்று தள்ளி பொதுமக்கள் மொத்தமாகக் கூடி நிற்பதைப் பார்த்து அங்கு அனில் சென்றார். அங்குச் சென்று பார்த்தபோது சன்ஸ்ருதி ரத்தவெள்ளத்தில் கிடந்தார். உடனே அவரை அனில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.

ஆனால் அதற்குள் சன்ஸ்ருதி இறந்து போனார். இது குறித்து அனில் கூறுகையில், ''எனது மகள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் வங்கி வேலையில் சேர்ந்திருந்தார். நான் வீட்டை விட்டு வெளியில் வந்தபோது அருகில் கூட்டமாக இருந்தது.
என்னவென்று பார்க்கச் சென்றபோது எனது மகள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். ஆனால் அதற்குள் இறந்துவிட்டார். இப்போது எங்களது ஒரே மகள் எங்களை விட்டுச் சென்றுவிட்டார் என்பதை எங்களால் நம்பமுடியவில்லை'' என்றார்.
இதனை நேரில் பார்த்த சந்தீப் என்பவர் கூறுகையில், ''சம்பவம் நடந்த இடத்தில் அடிக்கடி மேலிருந்து செங்கல் மற்றும் இரும்பு கீழே விழும். இதற்கு முன்பு இதுவரை யார் மீதும் விழுந்ததில்லை. அடிக்கடி புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் இருந்து இரும்பு, செங்கல் விழுவது குறித்து புகார் செய்தும் மாநகராட்சி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சன்ஸ்ருதி வேலைக்குக் கிளம்பிச் சென்றபோது எதிரில் வந்த தனது பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரிடம் பேசிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்த சில நொடிகளில் அவர் மீது 19வது மாடியில் இருந்து சிமெண்ட் பிளாக் விழுந்தது'' என்றார்.
கட்டுமானப்பணி நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு வலை கட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்த வலை மிகவும் சேதமடைந்த நிலையில் இருப்பதால் அதன் மீது விழும் கட்டிடக் கழிவுகள் கீழே வந்துவிடுகிறது. இச்சம்பவத்தையடுத்து மாநகராட்சி நிர்வாகம் கட்டிட கட்டுமானப்பணியை நிறுத்தும்படி பில்டரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.