மும்பை: `நான் ஏன் மராத்தி பேசவேண்டும்?' - வாடிக்கையாளரிடம் ஏர்டெல் ஊழியர் வாக்குவாதம், சர்ச்சை
சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ்.மூத்த தலைவர் பையாஜி ஜோஷி மும்பையில் அளித்திருந்த பேட்டியில், `மும்பையில் வாழ மராத்தி தெரிந்திருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை’ என்று குறிப்பிட்டு சர்ச்சையை கிளப்பி இருந்தார். இதற்கு அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து பையாஜி ஜோஷி தனது கருத்துக்கு விளக்கம் கொடுத்து இருந்தார்.
இப்போது தென்னிந்தியாவில் மொழிப்பிரச்னை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசும் மும்மொழிக்கொள்கையை அமல்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறது. மும்பையில் மராத்தி ஆட்சி மொழியாக இருந்தாலும், அனைத்து தரப்பு மக்களும் வசிப்பதால் அதிக அளவில் மராத்தி பேசப்படுவதில்லை. இந்தியே பிரதானமாக பேசப்படுகிறது.
இந்த நிலையில் மும்பையில் உள்ள ஏர்டெல் சேவை மையத்திற்கு மராத்தி வாடிக்கையாளர் ஒருவர் சென்று அங்கிருந்த பெண் ஊழியரிடம் மராத்தியில் பேசியிருக்கிறார்.

உடனே அந்த பெண் ஊழியர், பதிலுக்கு இந்தியில் பேசியிருக்கிறார். வாடிக்கையாளர் அதற்கு மராத்தியில் பேசும்படி கேட்டுக்கொண்டார். உடனே அந்த பெண் ஊழியர், `மராத்தி எனக்கு முக்கியம் கிடையாது. நாம் இந்துஸ்தானில் வசிக்கிறோம். யாரும் எந்த மொழியும் பேசலாம். நான் ஏன் மராத்தி பேசவேண்டும். மகாராஷ்டிராவை நீங்கள் வாங்கி இருக்கிறீர்களா? அல்லது மகாராஷ்டிரா உங்களுக்கு சொந்தமா. நான் எங்கு வேலை செய்யவேண்டும் எங்கு வேலை செய்யக்கூடாது என்று சொல்வீர்களா?’ என்று கேள்வி எழுப்பினார்.
வாடிக்கையாளர் பதிலுக்கு, `நீங்கள் எனது பிரச்னைக்கு தீர்வு காணவில்லை. அதோடு சரியாக பேசவும் இல்லை’ என்று கூறினார். பெண் ஊழியர் சத்தம் போட்டுள்ளார். எனினும் வாடிக்கையாளரின் குறையையும் தீர்த்து வைக்கவைக்கவில்லை என சொல்லப்படுகிறது.
`மராத்தி தெரிந்திருக்கவேண்டும்’
இருவரும் பேசியதை ஒருவர் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாகி இருக்கிறது. இது குறித்து பா.ஜ.க சட்டமேலவை உறுப்பினர் சித்ரா வாக் ஏர்டெல் நிறுவனத்திற்கு அனுப்பியுள்ள செய்தியில், ''ஒருவர் மகாராஷ்டிராவில் வசித்தால் அவர் கட்டாயம் மராத்தி தெரிந்திருக்கவேண்டும். மராத்தி தெரிந்திருக்கவில்லையெனில் தெரிந்து கொள்ள முயற்சி செய்யவேண்டும். மராத்திக்கு மரியாதை கொடுக்கவேண்டும். ஏர்டெல் கேலரியில் ஒரு பெண் ஊழியர் "ஆணவமும் முரட்டுத்தனமும்" காட்டி இருக்கிறார். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உங்கள் கேலரிகளில் உள்ள ஒவ்வொரு மேலாளரும் பணியாளரும் மராத்தியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆட்சேர்ப்பின் போது மராத்தி மொழி சரளமாகத் தெரிந்த நபர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்" என்று அவர் அனுப்பிய செய்தியில் கூறினார். இதனிடையே, நடந்த நம்பவம் துரதிஷ்டவசமானது என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
