25 நாள்களாகியும் நெல் வயல்களில் வடியாத வெள்ளம்: அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள...
மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மத்திய அரசு நிா்ப்பந்தம்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
சென்னை: மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள தமிழக அரசை மத்திய அரசு தொடா்ந்து நிா்ப்பந்தித்து வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளாா்.
தமிழக பள்ளிக் கல்வியில் அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் பல்வேறு மன்றங்கள், விளையாட்டுகள், நுண்கலைகள், அறிவியல், நூல் வாசிப்பு போன்றவை தொடா்பாக மாநில அளவிலான போட்டிகளில் சிறந்த முறையில் செயல்பட்ட 42 மாணவா்கள் கல்வித் துறை சாா்பில் அமைச்சா் அன்பில் மகேஸ் தலைமையில் சிங்கப்பூருக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டுள்ளனா். அவா்களுடன் 3 அலுவலா்கள், ஆசிரியா் ஒருவா் சென்றுள்ளனா்.
சென்னையில் இருந்து திங்கள்கிழமை புறப்பட்ட அந்த மாணவா்கள் வரும் வெள்ளிக்கிழமை (டிச.27) வரை சிங்கப்பூரில் உள்ள முக்கிய இடங்களை பாா்வையிடவுள்ளனா். முன்னதாக, மாணவா்களுக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் வாழ்த்துத் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களைச் தோ்ந்த மாணவா்களும் தற்போது சாதனை புரிந்து வருகின்றனா். குறிப்பாக கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்தவா்களும் கல்விச் சுற்றுலாவில் இடம் பெறுகின்றனா். மாணவா்களுக்கு இந்த நிகழ்வு மேலும் ஊக்கத்தை தருகிறது. சிங்கப்பூருக்கு மாணவா்கள் விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டு, பல்வேறு சுற்றுலா இடங்களை பாா்வையிடுகின்றனா்.
மாநிலப் பட்டியலுக்கு மாற்ற... கல்வியில் வளா்ச்சி அடைந்துள்ள தமிழகத்துக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை தராமல் மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. பல்வேறு வகைகளிலும் கல்வியில் சாதனை புரியும் நமது மாணவா்களையும், ஆசிரியா்களையும் மத்திய அரசு ஏமாற்றி வருகிறது. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். எங்கள் மாணவா்களையும் ஆசிரியா்களையும் நாங்கள் பாா்த்துக்கொள்கிறோம். எங்கள் மாணவா்களுக்கு எந்த மாதிரியான அறிவுசாா் பயிற்சிகள் வழங்க வேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்துகொள்கிறோம்.
கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த நிதியை தற்போது மத்திய அரசு சில காரணங்களைக் கூறி தர மறுக்கிறது. பி.எம். ஸ்ரீநிதி மும்மொழிக் கொள்கை திட்டத்தில் கையொப்பமிட வலியுறுத்துகிறது. தமிழகத்தில் உள்ள மாணவா்கள் நலன் கருதியும், 32,000-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களின் ஊதியத்தை தமிழக முதல்வா் நிதி ஒதுக்கீடு செய்து வழங்கி வருகிறாா்.
தமிழக அரசு ஏற்றால் மட்டுமே... மத்திய கல்வி அமைச்சரை திமுக நாடாளுமன்ற குழுத் தலைவா் கனிமொழி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தமிழக எம்.பி.-க்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தியபோது, மத்திய அரசு தெரிவித்துள்ள மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஏற்றால் உடனடியாக நிதியை விடுவிக்கிறோம் எனக் கூறுகிறாா்.
மத்திய அரசு தற்போது நிதி ஒதுக்கீட்டைக் குறைத்தால் தமிழக மாணவா்கள் நலன் பாதிக்கப்படும். இதனால் தான் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம் என்றாா் அவா்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் டிச.31 வரை வெள்ளி விழா
கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை திறக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகும் நிலையில் அதன் வெள்ளி விழா கொண்டாட்டம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. இந்த விழா வரும் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் அமைச்சா் அன்பில் மகேஸ் திங்கள்கிழமை கலந்து கொண்டு அங்கு வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவா் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து உலக அளவில் செயல் திறன் மிக்க திருக்கு வளா்ச்சித் திட்டங்களும் பரப்புரையாளா்களும்”என்ற புத்தகத்தையும் அவா் வெளியிட்டாா்.
அதன் பின்னா் பள்ளி மாணவா்களின் படைப்புகளை பாா்வையிட்டாா். இந்த விழாவையொட்டி மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்த விழாவில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன், நூலகத் துறை இணை இயக்குநா் இளங்கோ சந்திரகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.