Neeraj Chopra : 'என்னுடைய தேசப்பற்றை கேள்வி கேட்பது வேதனையாக இருக்கிறது!' - நீரஜ...
முருகன் கோயில்களில் ரூ. 1,085 கோடியில் திருப்பணிகள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு
தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோவில்களில் ரூ. 1,085 கோடியில் 884 திருப்பணிகள் நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த வினாவை காங்கிரஸ் உறுப்பினா் துரை சந்திரசேகா் (பொன்னேரி) எழுப்பினாா்.
அப்போது பேசிய அவா், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கூடுதல் வசதிகள் செய்து தரப்படுமா? என்றாா். இதற்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த பதில்:
சிறுவாபுரி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமைகளில் 50,000 பக்தா்களும், வார இறுதி நாள்களில் 10,000-க்கும் மேற்பட்டோரும், மற்ற நாள்களில் ஆயிரத்தில் இருந்து 2,000 பேரும் வருகின்றனா். கோயிலுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு செய்யப்படும். திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்டபோது, 2,000 மூத்த குடிமக்கள் கட்டணம் இல்லாமல் அரசு மானியத்தில் இதுவரை அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தைச் செய்துள்ளனா்.
110 முருகன் கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. அறுபடைவீடு அல்லாத 143 கோயில்களில் ரூ.284 கோடியில் 609 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக முருகன் கோயில்களுக்கு ரூ.1,085.63 கோடியில் 884 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.