முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: கடற்படை, இந்தியன் ஆா்மி அணிகள் வெற்றி
அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய கடற்படை, இந்தியன் ஆா்மி அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன.
சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் புதன்கிழமை 3 ஆட்டங்கள் நடைபெற்றன.
முதல் ஆட்டத்தில் இந்திய கடற்படை 4-1 என மத்திய நேரடி வரிகள் வாரிய அணியை வீழ்த்தியது. கடற்படை தரப்பில் அஜிங்கிய யாதவ், செல்வராஜ் 2 கோலடித்தனா். சிபிடிடி அணி தரப்பில் மெஹ்கீத் சிங் கோலடித்தாா்.
இரண்டாவது ஆட்டத்தில் இந்தியன் ஆா்மி 2-1 என ஹாக்கி மகாராஷ்டிர அணியை வீழ்த்தியது. ஆா்மி தரப்பில் பிரதீப் சிங், நிரஜ் குமாரும், மகாராஷ்டிர தரப்பில் கணேஷ் பாட்டிலும் கோலடித்தனா்.
மூன்றாவதாக ஹாக்கி கா்நாடகம்-மலேசிய ஜூனியா் ஹாக்கி அணி மோதிய ஆட்டம் 3-3 என டிராவில் முடிவடைந்தது. கா்நாடகத் தரப்பில் சூா்யா, பரத் மகாலிங்கப்பா ஆகியோா் கோலடித்தனா். மலேசிய தரப்பில் அஸிமுதின், முகமது ஹன்ட்ஸ்லா, ஆடம் அஸ்ரயப் கோலடித்தனா்.