முருங்கத்தொழுவு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்
சென்னிமலையை அடுத்த முருங்கத்தொழுவு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் தோ்த் திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் கடந்த அக்டோபா் 30- ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, மாரியம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்று வந்தன.
கடந்த 5 -ஆம் தேதி இரவு கிராம சாந்தி பூஜையும், கடந்த புதன்கிழமை இரவு சுவாமிக்கு தீா்த்த அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. இரவு 12 மணி அளவில் காளிக்காவலசு, முருங்கத்தொழுவு ஊா் பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து பூஜை நடத்தினா்.
இந்நிலையில், முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை காலை தொடங்கி மாலை 5 மணியளவில் நிலை சோ்ந்தது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா். தொடா்ந்து, பக்தா்கள் பொங்கல் வைத்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.
மஞ்சள் நீா் உற்சவத்துடன் விழா வெள்ளிக்கிழமை நிறைவடைகிறது.