Sriram Krishnan: SRM மாணவர், யூடியூபர், மஸ்கின் நண்பர்... ட்ரம்பின் ஆலோசகர் - யா...
முல்லைப்பெரியாறு: தமிழக பொதுப்பணித்துறை பகுதியில் சிசிடிவி பொருத்த கேரளா எதிர்ப்பு - நடந்தது என்ன?
தமிழக எல்லையில் உள்ள குமுளி அருகே தேக்கடியில் தமிழக பொதுப்பணித்துறை அலுவலகம் மற்றும் அரசுப் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் கண்காணிப்புக்காக 4 சிசிடிவி கேமராக்கள் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கேரள வனத்துறை, பெரியாறு புலிகள் காப்பக எல்லைக்குள் இருப்பதால் சிசிடிவி கேமரா பொருத்த அனுமதி பெற வேண்டும் எனக் கூறியது.
இதற்கு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள், எங்கள் எல்லைக்குள் கேமரா வைக்க கேரள வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டியதில்லை என விளக்கம் அளித்திருந்தனர். இதையேற்காத கேளர வனத்துறை மற்றும் பெரியாறு புலிகள் காப்பக அதிகாரிகள், கேமரா பொருத்தும் பணியை நிறுத்தினர். பொருத்தப்பட்ட கேமராவையும் அகற்ற வைத்தனர். இந்நிலையில் கேமரா பொருத்த நடப்பட்டிருந்த கம்பங்கள், கேபிள் ஓயர்கள் உள்ளிட்ட உபகரணங்கள் மாயமாகியுள்ளன. குமுளி போலீஸாரிடம் தமிழக அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள், ``முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் தலைமதகு பகுயில் தான், பொதுப்பணித்துறை அலுவலகம் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. பாதுகாப்பு கருதியும், தலைமதகு பகுதிக்கு வரும் நீர் வரத்து, வனவிலங்கள் நடமாட்டத்தை கண்காணிக்கவும் சிசிடிவி கேமரா பொருத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. எங்கள் எல்லைக்குள் கேமரா அமைக்க எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அவசியமே கேரள அதிகாரிகளுக்கு இல்லை.
ஆனால் தொடர்ச்சியாக அணை தொடர்பான விவகாரங்களில் இடையூறு செய்ய வேண்டும் என்பதையே நோக்கமாக கொண்டு செயல்படுகின்றனர். கடந்த 2 வாரத்திற்கு முன் அணை பராமரிப்புக்கு லாரியில் கொண்டு சென்ற தளவாடப் பொருள்களை தடுத்து நிறுத்தி அனுமதி பெற வேண்டும் என்றனர். தற்போது கேமரா வைக்க அனுமதி வாங்க வேண்டும் என்கின்றனர். இதை தமிழக அரசு கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தான் தீர்வை ஏற்படுத்த வேண்டும்" என்றனர்.