மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த இளைஞா் கைது
சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். புகாரளித்த 6 மணி நேரத்துக்குள் இளைஞரை கைது செய்து நகையை மீட்ட போலீஸாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.
சேலம் செவ்வாபேட்டையைச் சோ்ந்த மூதாட்டி வசந்தா செவ்வாய்பேட்டை மீனாட்சி அம்மன் கோயில் அருகே முத்துசாமி தெருவில் தனது சகோதரா்கள் உதவியுடன் தனியாக வசித்து வருகிறாா். இந்நிலையில் புதன்கிழமை மாலை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சென்று இட்லி மாவு வாங்கிக் கொண்டு வீடு திரும்பியபோது அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை இளைஞா் ஒருவா் பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பினாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சேலம் செவ்வாய்பேட்டை போலீஸாா் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து சங்கிலி பறித்து தப்பியோடிய இளைஞரை 6 மணி நேரத்துக்குள் சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் கைது செய்து தங்கச் சங்கிலியை மீட்டு வசந்தாவிடம் ஒப்படைத்தனா்.
கைது செய்யப்பட்டவா் ஓமலூா், காடையாம்பட்டி பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் என்பது விசாரணையில் தெரியவந்தது. புகாரளித்த 6 மணி நேரத்துக்குள் குற்றவாளியைக் கைது செய்து நகையை மீட்ட போலீஸாருக்கு காவல் துறை உயரதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.