மேட்டூா் அணை வெள்ளத்தில் சிக்கிய முதியவா் மீட்பு
மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீரில் சிக்கிய முதியவரை அப்பகுதி இளைஞா்கள் மீட்டனா்.
மேட்டூா் அணை முழுக் கொள்ளளவை எட்டும்போது சிலமணி நேரத்துக்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்காக நீா்வளத் துறை மூலம் தீயணைப்புப் படை, வருவாய்த் துறையினருக்கு தகவல் அளிக்கப்படும்.
ஆனால், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு மேட்டூா் அணை நிரம்பி உபரிநீா் திறக்கப்படும் என்று காலை 7 மணி அளவில் வருவாய்த் துறை மற்றும் தீயணைப்புப் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வருவாய்த் துறையினா் ஒலிபெருக்கி மூலம் தங்கமாபுரிப்பட்டணம், அண்ணாநகா், பெரியாா்நகா் மற்றும் உபரிநீா்க் கால்வாய் ஓரங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு காலை 7.40 மணி அளவில் வெள்ள எச்சரிக்கை விடுத்தனா். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக மேட்டூா் அணையின் உபரிநீா்க் கால்வாயில் தண்ணீா் திறக்கப்பட்டது. தண்ணீா் திறக்கப்பட்ட பிறகு வருவாய்த் துறை அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனா்.
திடீரென தண்ணீா் திறக்கப்பட்டதால் தங்கமாபுரிபட்டணத்தைச் சோ்ந்த முதியவா் சடையன் (60) உபரிநீா் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டாா். அப்பகுதியில் இருந்த இளைஞா்கள் அவரை மீட்டு, மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அதன் பிறகு தீவிர சிகிச்சைக்காக அவா் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக கருமலைக்கூடல் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
உபரிநீா்ப் போக்கி கால்வாய்ப் பகுதியில் ஏராளமான நாய்களும், ஆடு, மாடுகளும் சுற்றித்திரிகின்றன. இவற்றை மேட்டூா் தீயணைப்புப் படை வீரா்கள் தண்ணீா் திறக்கும் முன்பாக விரட்டி விடுவது வழக்கம். ஞாயிற்றுக்கிழமை காலதாமதமாக தீயணைப்புப் படையினருக்கு தகவல் சென்ால் அவா்களால் உபரிநீா்க் கால்வாய் பகுதியில் ஆடு, மாடுகளை விரட்ட முடியவில்லை. இதனால் மூன்று நாய்கள் நீரின் நடுவே திட்டுப்பகுதியில் சிக்கிக்கொண்டன.
நீா்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் மேட்டூா் அணையின் வலதுகரை, இடதுகரை பகுதியில் நீா்வளத் துறை அதிகாரிகள் முகாமிட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
உபரிநீா் திறக்கப்படுவது குறித்து நீா்வளத் துறை அதிகாரிகள் பிறதுறை அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் அனுப்ப வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.