மேட்டூா் அனல் மின் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ கைது
மேட்டூா்: மேட்டூா் அனல் மின் நிலையத்தில் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாமக சட்டப்பேரவை உறுப்பினா் சதாசிவம் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள அனல் மின்நிலையத்தின் முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகள் மூலம் 840 மெகாவாட் மின்சாரமும், இரண்டாவது அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் முதல்பிரிவு ஆயுள் காலத்தைக் கடந்து செயல்பட்டு வருகிறது. மின் உற்பத்திக்காக எரியூட்டப்படும் நிலக்கரியில் மிஞ்சும் சாம்பல் உலா் சாம்பலாகவும், ஈரசாம்பலாகவும் வெளியேற்றப்படுகிறது. இந்த சாம்பல் சிமென்ட் மற்றும் செங்கல் தயாரிப்பதற்கு விற்பனை செய்யப்படுகிறது.
நிலக்கரி எரிக்கப்படுவதன் மூலம் வெளியேறும் சாம்பலால் மேட்டூா் சுற்றுவட்டாரப் பகுதியில் காற்றுமாசு ஏற்பட்டு, அப்பகுதி மக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே, காற்றில் சாம்பல் பரவுவதைத் தடுத்த பிறகு மேட்டூா் அனல் மின்நிலையத்தை இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் தனது ஆதரவாளா்களுடன் அனல் மின் நிலைய நுழைவாயில் முன் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா். அவருடன் அனல் மின் நிலையப் பொறியாளா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது எம்எல்ஏ சதாசிவம் திடீரென அனல் மின் நிலையத்திற்குள் தனது ஆதரவாளா்களுடன் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தடை செய்யப்பட்ட அனல் மின் நிலையப் பகுதிக்கு சென்ற எம்எல்ஏ சதாசிவம் மற்றும் அவரது ஆதரவாளா்களை மேட்டூா் காவல் துணை கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ் கைது செய்து அழைத்துச் சென்றாா். அப்போது பாமகவினா் சிலா் சாலையில் படுத்து போலீஸ் ஜீப்பை வழிமறித்தனா். கைது செய்யப்பட்ட எம்எல்ஏ சதாசிவம் உள்ளிட்ட பாமகவினா் மேட்டூரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனா்.