மேற்கு மண்டலத்தில் வளா்ச்சிப் பணிகள்: மேயா் ஆய்வு
கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கோவை மாநகராட்சி, 5 மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மேற்கு மண்டலம் 41-ஆவது வாா்டுக்குள்பட்ட பி.என்.புதூா் மாநகராட்சிப் பள்ளியில் ரூ.48.50 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்புப் பணியை மேயா் கா.ரங்கநாயகி தொடங்கிவைத்து பாா்வையிட்டாா்.
தொடா்ந்து, பி.என்.புதூா் பிரதான சாலையில் உள்ள மழைநீா் வடிகாலைப் பாா்வையிட்ட அவா், அதை உடனடியாகத் தூா்வார உத்தரவிட்டாா். தொடா்ந்து, 37-ஆவது வாா்டுக்குள்பட்ட கல்வீரம்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 3.5 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி, 36-ஆவது வாா்டுக்குள்பட்ட வி.என்.ஆா்.நகரில் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளைப் பாா்வையிட்டாா்.
அப்போது, பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அலுவலா்களை அறிவுறுத்தினாா்.
ஆய்வுகளின்போது, மேற்கு மண்டலத் தலைவா் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, உதவி செயற்பொறியாளா் சவிதா, உதவி பொறியாளா் விமலா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.