தண்டகாரண்யம் விமர்சனம்: தெளிவான அரசியல்; தெறிக்கும் வசனங்கள்; ஆனால் படமாக முழுமை பெறுகிறதா?
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஒரு பழங்குடி கிராமத்தில் அப்பா, அம்மா, தம்பி முருகன் (கலையரசன்), மனைவி (ரித்விகா) ஆகியோருடன் வசித்து வருகிறார் சடையன் (தினேஷ்). தற்காலிக வனக்காலவர் பணியிலிருக்கும் முருகன், எப்படியாவது நிரந்தர பணியாளராக ஆக வேண்டுமென்ற கனவோடிருக்கிறார்.
இந்நிலையில், வனத்துறையின் அராஜகங்களை சடையன் தட்டிக்கேட்டதால், தம்பி முருகனின் தற்காலிக பணி பறிபோகிறது. நக்சலைட்டுகளை அழித்தொழிப்பு செய்ய உருவாக்கப்பட்ட சிறப்பு ஆயுதப்படையில் ஆள்சேர்ப்பு நடப்பதாக அறியும் சடையன், விவசாய நிலத்தை விற்று, அதற்கான பயிற்சிக்கு முருகனை அனுப்புகிறார்.
குடும்பத்தின் வறுமை, அதனால் தடைப்படும் காதல் திருமணம், காத்திருக்கும் காதலி (வின்ஸு சாம்), அண்ணன் சடையனின் நம்பிக்கை எனப் பல கனவுகளோடு, ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ஒரு பயிற்சிப் பள்ளியில் சேர்கிறார் முருகன்.
அங்கே நடக்கும் சம்பவங்கள், அவரையும், அவரது குடும்பத்தையும் எப்படி எல்லாம் பாதிக்கிறது என்பதே அதியன் ஆதிரை இயக்கியிருக்கும் 'தண்டகாரண்யம்' திரைப்படத்தின் கதை.

காதல், வனத்தின் மீதான அக்கறை, அண்ணன் மீதான மரியாதை, உயரதிகாரிகளிடம் பணிந்துக்கிடக்குமிடம், ஆற்றாமையில் உடையுமிடம், நண்பனுக்காகத் தவிக்கும் தருணம் என அழுத்தமான இளைஞனாக ரத்தமும் சதையுமாக வந்து பெரும்பாலான காட்சிகளைத் தன் தோளில் சுமக்கிறார் கலையரசன். ஆனாலும் உடைந்து அழும் இடத்தில் இன்னும் பயிற்சி வேண்டும்!
வனத்துறையின் அராஜகங்களைக் கண்டு வெகுண்டெழும் சடையனாக, தோற்றத்திலும் ஆக்ரோஷத்திலும் தன் தேர்வை நியாயம் செய்திருக்கிறார் தினேஷ். ஆனால், மிகப்பெரிய மன மாற்றங்களையும், சமூகப் பிரதிபலிப்புகளையும் உள்ளடக்கிய அந்தக் கதாபாத்திரத்திற்கு, நியாயம் செய்ய போதுமான காட்சிகள் எழுதப்படாதது மைனஸ்.

வஞ்சிக்கப்படும் வேறு மாநில இளைஞராக சபீர் கல்லரக்கல், தன் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார். முதல் பாதியில் ஆதிக்க மனப்பான்மை, இரண்டாம் பாதியில் எமோஷன் மீட்டர் என இரண்டிலும் கச்சிதம் காட்டியிருக்கிறார்.
யுவன் மயில்சாமி, அருள்தாஸ் ஆகியோர் தேவையான பயத்தைக் கடத்த, ரித்விகா, வின்ஸு சாம், பாலசரவணன், வேட்டை முத்துக்குமார் ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.
வன விலங்குகளோடு அடர் வனத்தின் அழகையும், கொடூரமான பயிற்சிக் களத்தின் தகிப்பையும் இயல்பு மாறாத ஒளியமைப்பால் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரதீப் காளிராஜா.
கதாபாத்திரங்களின் உணர்வுகள், அரசின் வஞ்சகத் திட்டங்கள், இவற்றுக்கிடையில் வரும் சமூக கருத்துகள் என எக்கச்சக்க மடிப்புகள் கொண்ட திரைக்கதை... இவற்றைக் கோர்வையாகக் கோக்கப் போராடியிருக்கும் படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல், அதில் பாதியே ஜெயித்திருக்கிறார்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில், உமா தேவி வரிகளில் 'காவக் காடே', தனிக்கொடி வரிகளில் 'நான் பொறந்த சீமையிலே' பாடல்கள் உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் உரமூட்டுகின்றன. அதேநேரம், சில பாடல்கள் அவை பொருத்தப்பட்ட இடங்களால், வேகத்தடையாகவும் மாறுகின்றன.

தன் பின்னணி இசையால், காட்சிகளின் பேசுபொருளைச் செறிவாக்கியிருக்கும் ஜஸ்டின், 'ஓ பிரியா பிரியா', 'மனிதா மனிதா' போன்ற பழைய இளையராஜா பாடல்களைக் கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
பழங்குடி கிராமம், பயிற்சி மையம் எனப் படத்தின் எதார்த்தத்திற்குத் துணை நின்றிருக்கிறார் கலை இயக்குநர் டி. ராமலிங்கம்.
அரசுகளும், கட்சிகளும் அரசியல் ஆதாயங்களுக்காக, 'போலி நக்சல்'களை, உருவாக்கிய சம்பவம், 2014-ம் ஆண்டு வெளிச்சத்திற்கு வந்தது. அச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, கதை, திரைக்கதையமைத்து இயக்கியிருக்கிறார் அதியன் ஆதிரை.
பழங்குடிகளை நிர்மூலமாக்கும் வனத்துறையின் கைகள், 2006 வன உரிமைச் சட்டம், நக்சல் வேட்டைகளுக்குப் பின்னான அரசியல், ஒரு நக்சல் உருவாகும் சூழல் எனச் சுட்டெரிக்கும் உண்மைகள் பலவற்றைப் பேச முயன்றிருக்கிறது மையக்கதை. பல காட்சிகளில் இவை வசனங்கள் மூலமாக வந்து, தோட்டாக்களாகச் சீறி, அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கவும் செய்கின்றன. ஆனால், இவை முழுமையான படமாக மாறாதது ஏமாற்றமே!
பழங்குடி கிராமத்தின் சூழல், முருகன் குடும்பம், சடையனின் ஆக்ரோஷம், முருகனின் காதல், வனத்துறையின் அராஜகப்போக்கு எனப் பல கிளைகளை வரிசையாக அடுக்கிய படி தொடங்குகிறது திரைக்கதை. காட்சிகள் துண்டுதுண்டாக நகர்ந்தாலும், நடிகர்களின் நடிப்பால் அவை ஓரளவிற்கு அழுத்தம் பெறுகின்றன.

ஜார்க்கண்ட்டிற்கு முழுமையாக மாறும் திரைக்கதை, கொடூரமான பயிற்சிச் சூழல், அங்குள்ள அரசியல், கலையரசன் - சபீர் மோதல், சபீரின் பின்கதை எனப் பதைபதைப்போடு, ஆழமும் அழுத்தமும் பெறுகிறது. ஆனால், சிறிது நேரத்திலேயே மீண்டும் கோர்வையில்லாத காட்சிகள், நியாயமான காட்சிகளில்லாத திருப்பங்கள், தேவைக்கு மீறிய பின்கதை, தெளிவில்லாத தகவல்கள் என ஏமாற்றுகிறது திரைக்கதை. இந்த ஏமாற்றத்துக்கு இடைவேளை மட்டுமே ஒரே ஆறுதல்!
கலையரசன் - சபீர் நட்பு, பயிற்சி மையத்தின் பின்னணியில் விவரிக்கப்படும் அரசின் வஞ்சம் என மையக்கதையைத் தொடுகிறது இரண்டாம் பாதி. கலையரசன் - சபீர் - பால சரவணன் காட்சிகள் மட்டுமே ஆறுதல் படுத்தி பார்வையாளர்களை மீண்டும் திரைப்பக்கம் இழுக்கின்றன.
பழங்குடிகளின் வழிபாடு, அதை வைத்துப் பேசப்படும் உருவகக் காட்சிகள், பிரதான கதாபாத்திரங்கள் எடுக்கும் அழுத்தமான முடிவுகள் எனக் கதையாகச் சுவாரஸ்யம் இருந்தாலும், போதுமான நிதானமும் தேவையான காட்சிகளும் இல்லாததால் இவையாவும் அந்தரத்தில் மிதக்கின்றன.

பல நேரங்களில் காப்பாற்றும் வசனங்களும் சில இடங்களில் ஓவர்டோஸ் ஆகிவிடுகின்றன. பல காட்சிகளில் சம்பந்தமே இல்லாமல் பின்னணி குரல் ஒலிப்பதும், முக்கியமான காட்சிகளைப் பின்னணி வசனங்களாலேயே நகர்த்தியிருப்பதும் பெரிய மைனஸ்!
இதனால், க்ளைமாக்ஸ் அதிரடிகளும், அதிர்வுகளும் போதுமான உணர்வுகளைக் கடத்தாமல் போகின்றன.
கதையும், நேர்த்தியான தொழில்நுட்ப ஆக்கமும் கைகொடுத்தாலும், அழுத்தமும் தெளிவும் நிதானமும் இல்லாத திரைக்கதையால், போதுமான வலியைக் கடத்தாமல் கடந்து போகிறது இந்த 'தண்டகாரண்யம்'.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...