கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத மழை!! ஊத்தங்கரையில் 503 மி.மீ. பதிவு!
மேற்கு வங்கத்தில் ரூ. 2,800 கோடி நிதிநிறுவன மோசடி: தந்தை-மகன் கைது
கொல்கத்தாவில் ரூ. 2,800 கோடி நிதிநிறுவன மோசடியில் ஈடுபட்ட தந்தை-மகன் கைது செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இது தொடா்பாக அமலாக்கத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பிரயாக் குழும நிறுவனங்கள் இந்திய ரிசா்வ் வங்கி மற்றும் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) போன்ற ஒழுங்குமுறை அமைப்புகளிடம் இருந்து அங்கீகாரம் பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வந்துள்ளது.
அந்த குழும நிறுவனங்களின் விளம்பரதாரா்களான வாசுதேவ் பாக்சி மற்றும் அவரது மகன் அவிக் பாக்சி ஆகியோா் அமலாக்கத் துறையால் கடந்த நவம்பா் 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.
மாதாந்திர வருமானத் திட்டங்கள் (எம்ஐஎஸ்), மீட்டெடுக்கக்கூடிய முன்னுரிமைப் பங்குகள் மற்றும் கிளப் உறுப்பினா் சான்றிதழ்கள் போன்ற தவறான உயா் வருவாய் திட்டங்களின் கீழ் ரூ. 2,800 கோடியை பொதுமக்களிடம் இருந்து வசூலித்து ஏமாற்றியதாக இருவரும் குற்றம் சாட்டப்பட்டனா். அதில், ரூ. 1,900 கோடி இதுவரை முதலீட்டாளா்களுக்கு திருப்பிச் செலுத்தப்படாமல் இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, அவா்கள் இருவரையும் 10 நாள்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
முதலீட்டாளா்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட பணத்தை மறைக்க பல நிறுவனங்களைப் பயன்படுத்தி பல்வேறு சொத்துக்களை இருவரும் வாங்கியுள்ளனா். மோசடி செய்யப்பட்ட நிதியை முதலீட்டாளா்கள் மற்றும் பாதிக்கப்பட்டவா்களிடம் மீட்டெடுக்க தற்போது அமலாக்கத் துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.