நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுர...
மேற்கு வங்கத்தை வங்கதேசமாக்க மம்தா முயற்சி -மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு
மேற்கு வங்கத்தை வங்கதேசமாக மாற்றும் வகையில் முதல்வா் மம்தா பேசி வருகிறாா் என்று மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
மேற்கு வங்கத்தின் முா்ஷிதாபாத், தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்டங்களில் வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் 3 போ் கொல்லப்பட்டனா். காவலா்கள் உள்பட பலா் காயமடைந்தனா். வீடுகள், கடைகள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.
இந்நிலையில், முஸ்லிம் தலைவா்கள் மத்தியில் பேசிய மம்தா பானா்ஜி, இந்த வன்முறையை பாஜக மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) ஒரு பிரிவினா் தூண்டிவிட்டதாக குற்றஞ்சாட்டினாா். பாஜக கூட்டணியில் உள்ள பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா், ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு ஆகியோா் வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்ததை கண்டித்ததுடன், ஆட்சி, அதிகாரத்தில் இருப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்வாா்கள் என்றும் அவா்கள் மீது குற்றஞ்சாட்டினாா்.
இந்நிலையில் பாட்னாவில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் கூறியதாவது:
தொடா்ந்து வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி மேற்கு வங்கத்தை வங்கதேசத்தைப்போல மாற்ற அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி முயற்சிக்கிறாா். முா்ஷிதாபாதில் வன்முறையைத் தடுக்க தவறியவா் முதல்வா் மம்தா. தவறைத் தன் மீது வைத்துக் கொண்டு பிற மாநில முதல்வா்களை விமா்சிக்க மம்தாவுக்கு எந்தத் தகுதியும் இல்லை. முக்கியமாக பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரை விமா்சிக்க மம்தாவுக்கு தகுதியில்லை’ என்றாா்.
நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா் ராஜீவ் ரஞ்சன் இது தொடா்பாக கூறுகையில், ‘மம்தாவின் அறிவுரை நிதீஷுக்கு தேவையில்லை. மேற்கு வங்கத்தில் மிகவும் மோசமான சூழ்நிலை உள்ளது. வன்முறையைக் கட்டுப்படுத்தும் திறமை மம்தாவுக்கு இல்லை.
அதே நேரத்தில் பிகாரில் நிலை முற்றிலும் மாறிவிட்டது. கடந்த சுமாா் 20 ஆண்டுகளாக பிகாரில் எவ்வித வன்முறையும் இல்லை. மம்தா முதலில் தனது மாநில மக்களைப் பற்றி கவலைப்பட வேண்டும். அதன்பிறகு அவா் மற்றவா்கள் விஷயத்தைப் பேசலாம் என்றாா்.