யானைத் தந்தங்கள் பறிமுதல்! ஒருவர் கைது!
வடகிழக்கு மாநிலமான அசாமில் சட்டவிரோதமாக யானைத் தந்தங்கள் வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடழுகிரி மாவட்டத்தின் ஹரிசிங்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போங்ரன் கிராமத்தில் மனாஸ் தேசியப் பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தின் வனத்துறை குழு ஒன்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, 54 வயதுடைய நபர் ஒருவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக வைத்திருந்த யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட யானைத் தந்தங்கள் சுமார் 13 கிலோ எடை உடையதாகவும், அவரிடமிருந்து ஒரு செல்போன் கைப்பற்றி அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தெலங்கானா சுரங்கத்தில் சிக்கியவர்களை நெருங்கிய மீட்புக் குழு!
அந்நபரது கூட்டாளி ஒருவர் தப்பியோடிய நிலையில் அவருக்கு சொந்தமான நான்கு சக்கர வாகனம் ஒன்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், தலைமறைவாகிய அந்நபரை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, சுமார் 850 சதுர கி.மீ. தொலைவிற்கு பரப்பளவிலான மனாஸ் தேசியப் பூங்காவானது மேற்கு அசாமின் பக்ஸா மற்றும் சிராங் மாவட்டத்திலுள்ள கிழக்கு இமாலய மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.