யார் அகதிகள்? சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி - திரை விமர்சனம்!
நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த தமிழரான சசிகுமார் தன் நாட்டிலிருந்து குடும்பத்துடன் தப்பித்து ராமேஸ்வரம் வழியாக புதிதாக வாழ்க்கையைத் துவங்க சென்னைக்கு வருகின்றனர். தெரியாத ஊர், மனிதர்கள் என அவர்களைப் பெருநகர நெருக்கடிகள் சூழ்கின்றன. இலங்கைத் தமிழர்கள் எனத் தெரிந்தால் பிரச்னைகள் வரலாம் என சசிகுமார் குடும்பத்தினர் ரகசியமாகத் தங்கள் அடையாளங்களை மறைக்கின்றனர். இப்படியான சூழலில் ஒரு பிரச்னை வெடிக்கிறது. அது என்ன பிரச்னை? சசிகுமாரின் குடும்பம் அதை சமாளித்தார்களா? என்பதே டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் கதை.
அறிமுக இயக்குநராக அபிஷன் ஜீவிந்துக்கு சிறந்த படமாகவே டூரிஸ்ட் ஃபேமிலி அமைந்துள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் இடையேயான உறவிற்கு நீண்ட கால பிணைப்பு உண்டு. இலங்கைப் போரில் லட்ச கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டது, உயிர்பயத்தில் அண்டை நாடுகளுக்குள் அகதிகளாக தப்பிச் சென்றது என ஈழத்தமிழர்களின் அவலங்கள் நிறைய.
வரலாறுகள் அப்படியிருக்க, அதைத் தொட்டு ஒரு அழகான ஈழத் தமிழ் குடும்பத்தின் கதையுடன் தாய்நாட்டைவிட்டு வெளியேறி அடைக்கலம் தேடும் துயரங்களைப் பேசிய டூரிஸ்ட் ஃபேமிலி பல இடங்களில் நம்மை நெகிழ்ச்சி அடையச் செய்கிறது.
எங்கோ ஒரு நாட்டிலிருந்து பிழைக்க வந்த ஒரு குடும்பம் நன்றாக இருக்கும் பல குடும்பங்களுக்கு தங்களின் அன்பால் புதிய வெளிச்சத்தைக் கொடுப்பது என 2 மணி நேரத் திரைப்படத்தில் நகைச்சுவையும் அழுத்தமான உணர்ச்சிகளுமாக கதை எங்கும் கவனத்தை சிதறடிக்காமல் பல விஷயங்களை யோசிக்க வைக்கிறது. நாம் யாருக்கான கதையைப் பேசப்போகிறோம் என்பதில் இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் நல்ல புரிதல் இந்திருக்கிறது. வாழ்த்துகள்.
நாங்கள் எந்த தமிழில் பேசுகிறோம் என்பது பிரச்னையா? இல்லை தமிழில் பேசுவதே பிரச்னையா? என்பது போன்ற வசனங்கள் கைதட்டல் பெறுகின்றன. இறுதியாக அகதி பற்றிய ஒரு வசனத்துடன் படம் முழுமையடைவது வரை நல்லவர்களால் நிறைந்து தழும்புகிறது கதை.
குறைகள் என்றால், சில காட்சிளின் கால அளவை நீடித்திருக்கலாம் எனத் தோன்றியது. ஈழத்தமிழர் - தமிழக மக்கள் என அழுத்தமான பிணைப்பை இன்னும் எமோஷனல் காட்சிகளுடன் நிறுவியிருந்தால் இப்படத்தின் தரம் அதிகரித்திருக்கும். சில இடங்களில் சொல்லவந்த விஷயத்திற்கு முன்பே காட்சிகள் கட் செய்யப்பட்ட தோற்றத்தை அளித்தது சிறிய பலவீனம்.
மனிதத்தை, அன்பைப் பேசும் கதையென்றாலே நடிகர் சசிகுமார் நம்மை நெகிழச் செய்துவிடுகிறார். ஒரு குடும்பத் தலைவனாக இலங்கையிலிருந்து சென்னை வருபவர் அடையாளங்களை மறைத்து தன் மனைவி, பிள்ளைகளுக்குப் பாதுகாப்பாக நிற்க போராடுவது என பல காட்சிகளில் உயிரோட்டமான நடிப்பை வழங்கியிருக்கிறார். அவருக்கு நல்ல ஜோடியாக சிம்ரனின் திரைத்தோற்றம் ரசிக்க வைக்கிறது. ‘ஓம் அண்ணா’ என யோகி பாபுவிடம் அவர் பேசும் வசனங்கள் கைதட்டி சிரிக்கும் அளவிற்கு நன்றாக இருக்கின்றன.
மகன்களாக நடித்த கமலேஷ், மிதுன் ஆகியோரும் ரசிக்க வைக்கின்றனர். இவர்களைத் தாண்டி நடிகர்கள் எம். எஸ். பாஸ்கர், குமரவேல், ரமேஷ் திலக் ஆகியோருக்கு மிக நல்ல கதாபாத்திரங்கள். மூன்று பேரின் கதாபாத்திர வடிவமைப்புகளும் கதைக்கு பலமாக அமைந்துள்ளன. ’லாலா குண்டா பொம்பைகள்’ மூலம் கவனம் பெற்ற பிரசன்னா நல்ல தேர்வு. சிறந்த நடிகராக வருவதற்கான தகுதியுள்ளார். அதேபோல் நடிகர்கள் பக்ஸ், கேகே உள்ளிட்டோரும் கவனம் ஈர்க்கின்றனர்.
நடிகர் யோகி பாபுவின் நகைச்சுவைக் காட்சிகள் சரியாக கைகொடுத்திருக்கிறது. அவர் வரும் காட்சிகளில் எல்லாம் ரசிக்கக்கூடிய தருணங்கள் அதிகம் இருக்கின்றன.
இசையமைப்பாளர் சான் ரோல்டன் தன் பின்னணி இசையால் வசனங்கள் தேவைப்படாத இடத்தை உருவாக்குவதுடன் சாதாரணமாகக் கடக்க வேண்டிய வசனங்களை எமோஷனல் தருணங்களாக மாறுவது சிறப்பு. ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதனின் ஒளியமைப்பும் நன்று.
அகதியாக வருபவர்களை முதலில் நாம் மனிதர்களாக நடத்துகிறோமா? உண்மையில், யார் அகதிகள்? என்கிற கேள்விகளுகெல்லாம் மிகச்சிறப்பான பதிலைப் படக்குழுவினர் கொடுத்திருக்கின்றனர். தமிழ் சினிமாவில் எவ்வளவோ நல்ல கதைகள் திரைப்படமாகியிருக்கின்றன. அந்தப் பட்டியலில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்திற்கும் அழகான இடமுண்டு!