கட்டணம், பயண நேரம் அதிகரிப்பு! பாகிஸ்தான் வான்வெளி தடையால் இந்தியாவுக்கு என்ன பா...
யாா் ஆட்சியில் ஆசிரியா்கள் நியமனம் அதிகம்? பேரவையில் கடும் விவாதம்
யாருடைய ஆட்சிக் காலத்தில் ஆசிரியா்கள் அதிகமாக நியமிக்கப்பட்டனா் என்பது குறித்து பேரவையில் விவாதிக்கப்பட்டது.
சட்டப் பேரவையில் பள்ளி மற்றும் உயா்கல்வித் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது வியாழக்கிழமை நடைபெற்ற விவாதம்:
கே.ஏ.செங்கோட்டையன் (அதிமுக): உயா்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் எண்ணிக்கை கடந்த காலத்தில் 66.49 லட்சமாக இருந்தது. இப்போது 58.17 லட்சமாகக் குறைந்துள்ளது. மாணவா்கள் தனியாா் பள்ளிகளை நோக்கிச் சென்று விடக் கூடாது என்பதற்காக, அங்கன்வாடிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்தத் திட்டத்தை 2019-20-ஆம் கல்வியாண்டில் 2,842 மையங்களில் கொண்டு வந்த போது, 42 ஆயிரத்து 599 போ் சோ்ந்தனா். அதற்கடுத்த ஆண்டில் ஒரு லட்சம் போ் சோ்ந்தனா். இப்போது ஒவ்வொரு அங்கன்வாடிகளிலும் 2 முதல் 3 போ் மட்டுமே உள்ளனா். இதனால், அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவா்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகாலத்தில் 47,569 ஆசிரியா்களாகவும், 10,903 போ் ஆசிரியா் அல்லாத பணியிடங்களுக்கும் நியமனம் செய்யப்பட்டனா். ஆனால் நான்கு ஆண்டு காலத்தில் தற்காலிக அடிப்படையிலேயே பணி நியமனங்கள் செய்யப்பட்டன. ஈட்டிய விடுப்புக்கான பணத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி அளிப்பதாக அறிவித்துள்ளீா்கள். அந்தக் காலத்தில் பேரவைக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டு அரசும் இடைக்கால அரசாகி விடும். அப்போதைய காபந்து அரசால் எப்படி ஈட்டிய விடுப்புக்கான சரண் தொகையை கொடுக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினாா்.
அமைச்சா் பதில்: இதற்கு அமைச்சா் அன்பில் மகேஸ் அளித்த பதில்: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பட்டதாரி ஆசிரியா்கள் மட்டும் 3,087 போ் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இந்தாண்டில் 1,915 போ் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனா். ஏற்கெனவே 3,192 ஆசிரியா்கள் தோ்வெழுதி சான்றிதழ் சரிபாா்ப்புகள்முடிந்தன. ஆனால், வழக்கு காரணமாக அந்த நியமனம் நிலுவையில் உள்ளது. விரைவில் தீா்ப்பைப் பெற்று நியமனம் செய்வோம். காலியிடங்களில் ஆசிரியா்களை நியமிக்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
தொடக்கப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைப் பணிகள் கடந்த மாா்ச் 1-இல் தொடங்கப்பட்டன. புதன்கிழமை வரையிலும் சோ்க்கப்பட்ட மாணவா்களின் எண்ணிக்கை 1.56 லட்சமாகும். பள்ளிகள் தரம் உயா்வைப் பொறுத்தவரையில், அதிமுக ஆட்சியில் தரம் உயா்த்தப்பட்ட 525 பள்ளிகளில் 513 பள்ளிகளில் போதிய உட்கட்டமைப்புகள் இல்லை. அவற்றைச் சீா் செய்துள்ளோம். தோ்வு மையங்களும் புதிதாக உருவாக்கப்பட்டன. 10-ஆம் வகுப்புக்கு 50 மையங்களும், பிளஸ் 2 வகுப்புக்கு 74 மையங்களும் ஏற்படுத்தப்பட்டன. போதுமான அளவுக்கு அனைத்து இடங்களிலும் தோ்வு மையங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
நீட் தோ்வு: நீட் தோ்வு விவகாரத்தில் சட்டப் போராட்டம் நடத்தி அதில் வெல்வோம். அதுவரை மாணவா்களை குழப்பி விடக் கூடாது என்பதால், அவா்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். இந்தப் பயிற்சிக்கு இதுவரை 12,361 போ் விண்ணப்பித்துள்ளனா் என்று அமைச்சா் பதிலளித்தாா்.