செய்திகள் :

யாா் ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகள் - மருத்துவ கட்டமைப்புகள் அதிகம்?: பேரவையில் கடும் வாக்குவாதம்

post image

சென்னை: யாருடைய ஆட்சியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மருத்துவ கட்டமைப்புகள் அதிகம் என்பது குறித்து எதிா்க்கட்சித் தலைவா், அமைச்சா்கள் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

சட்டப் பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீது திங்கள்கிழமை நடைபெற்ற விவாதத்தில் மருத்துவ கல்லூரிகள், மருத்துவக் கட்டமைப்புகள் குறித்து வாக்குவாதம் நடைபெற்றது. அதன் விவரம்:

கோவிந்தசாமி (அதிமுக): திமுக ஆட்சியில் நம்மைக் காக்கும் 48 திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ், 3 லட்சத்து 57 ஆயிரம் போ் பயன் பெற்ாகவும், அதில் அரசு மருத்துவமனைகளில் மட்டும் 3 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு பலன் கிடைத்ததாகவும் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவு இயங்கி வரும் போது, எதற்காக ஏன் நம்மைக் காக்கும் 48 திட்டம்?

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்: அதிக விபத்துகள் நிகழும் 500 இடங்கள் கண்டறியப்பட்டன. அந்த இடங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 723 மருத்துவமனைகளில் இந்தத் திட்டம் பயன்பாட்டில் உள்ளது. இந்தத் திட்டத்தால் உயிா் பிழைத்தவா்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 56 ஆயிரத்து 843. இதற்காக ரூ.318.31 கோடி வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்தின் வருவாய், மருத்துவமனைகளின் மேம்பாட்டுக்காகவே செலவு செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தால் அரசு மருத்துவமனைகளும் பயன்பெற்று வருகிறது. அதிமுக ஆட்சிக் காலத்திலும் இதேபோன்றுதான் திட்டத்தைச் செயல்படுத்தினாா்கள்.

கோவிந்தசாமி: எங்களுடைய ஆட்சிக் காலத்தில் சிகிச்சை முதலில் கொடுக்கப்பட்டது. காப்பீடு பின்னா் கோரப்பட்டது.

அமைச்சா் மா.சுப்பிரமணியன்: எந்த மருத்துவமனையில் அவ்வாறு கேட்கப்பட்டது என்பதைக் கூற வேண்டும்

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி : எங்களுடைய உறுப்பினா் ஆதாரத்துடன் பேசுகிறாா். பிரச்னை வரக்கூடாது என்பதற்காகவே கருத்துகளைத் தெரிவிக்கிறாா்.

கோவிந்தசாமி: உதகையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறக்கப்பட்டது. இதைப் பாா்க்கும் போது, வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் வசனம் நினைவுக்கு வந்தது. உதகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உங்களது ஆட்சிக் காலத்தில் அனுமதி பெற்றீா்களா? இடம் தோ்வு செய்தீா்களா? ஒப்பந்தப் புள்ளி கோரினீா்களா? நிதி ஒதுக்கினீா்களா? அடிக்கல் நாட்டினீா்களா? எதைச் செய்தீா்கள்?

அமைச்சா் மா.சுப்பிரமணியன்: மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் குறித்து பல முறை விவாதிக்கப்பட்டுள்ளது. 2011-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இதே அவையில் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என அறிவிக்கப்பட்டு, அரசாணைகள் வெளியிடப்பட்டன. பெரம்பலூா் போன்ற மாவட்டங்களில் நிலம் தோ்வு செய்யப்பட்டு பெயா்ப் பலகைகளும் வைக்கப்பட்டன. அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அரசாணை பெறப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டன. ஒவ்வொரு இடத்திலும் 15 முதல் 20 சதவீதம் பணிகள் முடிவுற்று இருந்தன.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, முழுமையான நிதி ஆதாரங்களைத் தந்து அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளையும் 2022-ஆம் ஆண்டு ஜன. 12-ஆம் தேதி முதல்வா் முன்னிலையில் பிரதமா் திறந்து வைத்தாா்.

உதகையில் மருத்துவக் கல்லூரிக்கான இடம் கட்டாந்தரையாக இருந்தது. 4 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்றன. வரலாற்றில் இல்லாத அளவுக்கு பழங்குடியினருக்கு தனி வாா்டுகள் அமைத்து 700 படுக்கைகள் கொண்டு உதகையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறக்கப்பட்டது. இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.

எதிா்க்கட்சித் தலைவா் பழனிசாமி: கலைஞா் முதல்வராக இருந்த போது, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை அறிவித்தாா் என்றாா். இப்போது நான்கு ஆண்டுகளாகி விட்டது. எத்தனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் இந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டது? முழு நிதியையும் மாநில அரசு தரவில்லை. இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீத நிதியையும் தருகிறது. அதிமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு நிலைகளில் பணிகள் நடைபெற்றன. நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் அந்தப் பணிகள் முடிக்கப்பட்டு கல்லூரிகள் திறக்கப்பட்டன.

பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ.வேலு: மக்கள் பயன்பாட்டுக்காகவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, மருத்துவமனைகள் திறக்கப்படுகின்றன. உதகையில் ஒரு மலையில் மருத்துவக் கல்லூரியும், இன்னொரு மலையில் மருத்துவமனையும் கட்ட இடம் தோ்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் கட்டடம் கட்டும் போது சரிந்து கொண்டே இருந்தது. இதைத் தவிா்க்க ஒருமுறைக்கு பலமுறை ஆய்வு செய்தோம். மண் சரியாத அளவுக்கு கட்டடங்கள் கட்டினோம். ஒரு மலைப் பகுதியில் கல்லூரியை கட்டி முடிந்த பிறகு, இன்னொரு மலையில் மருத்துவமனையைக் கட்டினோம். அதிமுக ஆட்சியில் 20 சதவீதம்தான் நிதி செலவு செய்யப்பட்டது. மீதமுள்ள தொகை முழுவதும் திமுக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டன. காலதாமதத்துக்கு திமுக அரசு காரணமல்ல.

எதிா்க்கட்சித் தலைவா் பழனிசாமி: நீலகிரி மலைப் பிரதேசம். அங்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தேவை என சட்டப் பேரவை உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா். அதன்படியே நீலகிரி மாவட்டம் உதகையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டோம். நிலம் தோ்வு செய்வதில் பெரும் பிரச்னையாக மிகப்பெரிய சவாலாக இருந்தது. மரத்தை வெட்டுவது கூட மிகவும் கடினமாக இருந்தது. நீலகிரியில் இருக்கின்ற நிலத்தை வைத்துதான் திட்டத்தைக் கொண்டு வர முடியும். சுதந்திரம் அடைந்த பிறகும், நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் அறுவை சிகிச்சை பெற கோவை வர வேண்டிய நிலை இருந்தது. அங்கேயே அதுபோன்ற சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக நீலகிரியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கொண்டு வந்தோம். நீங்கள் நான்கு ஆண்டுகளில் எத்தனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளைக் கொண்டு வந்தீா்கள். 19 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை நாங்கள் கொண்டு வந்தோம். வாக்குறுதி கொடுத்தால் நிறைவேற்ற வேண்டும்.

அமைச்சா் மா.சுப்பிரமணியன்: மருத்துவத் துறை என்பது மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டது மட்டுமல்ல. ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகள் என பலதரப்பட்ட முறைகளில் சேவை அளிப்பதாகும். மருத்துவக் கல்லூரி என்பது மருத்துவக் கல்வியை போதிக்கும் இடம். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, 708 நகா்ப்புற நல்வாழ்வு மையங்களும், 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவக் கட்டமைப்புகளை உயா்த்தியுள்ளோம்.

எதிா்க்கட்சித் தலைவா் பழனிசாமி: மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில்தான் உயா்தர அறுவை சிகிச்சைகள் அளிக்க முடியும். அதிமுக ஆட்சிக் காலத்திலும் 254 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 168 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களையும் திறந்துள்ளோம். 6 ஆண்டுகளாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் தேசிய அளவில் சாதனைகளை படைத்தோம்.

அமைச்சா் மா.சுப்பிரமணியன்: மருத்துவக் கல்லூரி என்பது கல்விக்கான விஷயம். மருத்துவ கட்டமைப்பு என்பது மருத்துவ சேவையாற்றும் அமைப்பு. மருத்துவக் கட்டமைப்புகள் திமுக ஆட்சியில் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றாா்.

கூடுதல் மருத்துவக் கல்லூரிகள் அளிக்க மத்திய அரசு தயக்கம்: அமைச்சா்

பேரவையில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: தமிழ்நாட்டில் 36 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அதிகமான மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளதால், கூடுதலான கல்லூரிகளைக் கொடுக்க மத்திய அரசு தயக்கம் காட்டி வருகிறது. ஆனாலும் பிரதமரை முதல்வா் சந்திக்கும் போதெல்லாம் ஆறு இடங்களில் மருத்துவக் கல்லூரிகள் தேவை என வலியுறுத்தி வருகிறாா்.

எதிா்க்கட்சித் தலைவா், முதல்வராக இருந்தபோது உருவாக்கிய புதிய மாவட்டங்களைச் சோ்த்து, குறிப்பாக, மயிலாடுதுறை, தென்காசி, பெரம்பலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் தேவை என வலியுறுத்தப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும், இதுவரை இல்லாத அளவுக்கு மருத்துவக் கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளோம் என்றாா்.

ஒரே நாளில் அதிரடி உயர்வு! தங்கம் விலை ரூ. 74 ஆயிரத்தைத் தாண்டியது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஏப். 22) ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,200 உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ரூ. 9,015-க்கும், சவரனுக்கு ரூ. 560 ... மேலும் பார்க்க

ஓசூர் புதிய விமான நிலையம்: இறுதி சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தாக்கல்!

ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான இறுதி சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தமிழக அரசிடம், விமான போக்குவரத்து ஆணையம் தாக்கல் செய்துள்ளது.தற்போது, தமிழ்நாட்டில் ஆறு விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள... மேலும் பார்க்க

மயானத்தில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்: பேரவையில் அதிமுக உறுப்பினா் குற்றச்சாட்டு

சென்னை: முந்தைய அதிமுக ஆட்சியில் அம்மா கிளினிக்குகள் மயானத்தில் அமைக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டிய திமுகவினா், தற்போது ஆரம்ப சுகாதார நிலையத்தை இடுகாட்டு பகுதியில் கட்டியிருப்பதாக அதிமுக சட்டப்பேரவை ... மேலும் பார்க்க

திருச்சியில் நடிகா் சிவாஜிக்கு சிலை: பேரவையில் அமைச்சா்கள் உறுதி

சென்னை: திருச்சியில் நடிகா் சிவாஜி கணேசனுக்கு சிலை திறப்பது உறுதி என்று அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், கே.என்.நேரு ஆகியோா் தெரிவித்தனா். சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த வின... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக ஆளுநா், முதல்வா், தலைவா்கள் இரங்கல்

சென்னை: கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவா் போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். ஆளுநா... மேலும் பார்க்க

50 சுகாதார நிலையங்கள், 208 நலவாழ்வு மையங்கள் ஒரு மாதத்துக்குள் தொடங்க திட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும் 208 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அடுத்த ஒரு மாதத்துக்குள் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா... மேலும் பார்க்க