யூரோ 2025: வரலாற்று வெற்றிக்கு உதவிய 35 வயது இத்தாலிய வீராங்கனை!
யூரோ மகளிர் கால்பந்து போட்டியில் இத்தாலி அணி 28 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்குச் சென்றுள்ளது.
ஸ்டேட் டி ஜெனீவ் திடலில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் நார்வே உடன் மோதிய இத்தாலி 2-1 என வென்றது.
இந்தப் போட்டியில் இத்தாலியின் கிறிஸ்டியானா கிரெல்லி 50ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, நார்வே அணியின் ஹெக்கர்பெர்க் 66-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து பதிலடி கொடுத்தார்.

விறுவிறுப்பாகச் சென்ற இந்தப் போட்டியில் 90-ஆவது நிமிஷத்தில் ஹெட்டர் அடித்த் இத்தாலியின் கிறிஸ்டியானா கிரெல்லி வெற்றிக்கு வித்திட்டார்.
வரலாற்று வெற்றி
இந்தப் போட்டியில் 51 சதவிகிதம் பந்தினை தனது கட்டுக்குள் வைத்திருந்த இத்தாலி அணி நார்வே அணியை விட குறைவான தவறுகளே செய்தது.
நார்வே அணி 10 பௌல்களைச் செய்ய இத்தாலி 2 மட்டுமே செய்திருந்தது.
இந்தப் போட்டியில், இலக்கை நோக்கி இத்தாலி 6 முறை அடிக்க, நார்வே 1 முறை மட்டுமே அடித்திருந்தது.
இந்த வெற்றியின் மூலமாக இத்தாலி அணி 28 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்த வெற்றி குறித்து 35 வயதாகும் கிறிஸ்டியான கிரெல்லி கூறியதாவது:
இத்தாலி பெண்களுக்கு சமர்ப்பணம்
இது எங்களுக்கான வெற்றி மட்டுமல்ல, இத்தாலியில் கால்பந்து விளையாடும் அனைத்து பெண்களுக்குமானது.
இந்த வெற்றி அணியிலுள்ள 23 பெண்களுக்குமானது. ஆனால், இந்தப் போட்டியை வீட்டிலிருந்து பார்க்கும் வருங்கால அனைத்து இத்தாலி பெண்களுக்கும் இது சமர்ப்பணம்.
புதிய தலைமுறை அணிக்கு இந்த வெற்றி நம்பமுடியாதது. ஐரோப்பியாவில் நான்கில் ஒரு அணியாக இருப்பது கனவு நனவானதுபோல் இருக்கிறது என்றார்.
இத்தாலி நாட்டிற்காக, கிரெல்லி 61 கோல்களை அடித்துள்ளார். கடைசி 3 கோல்களை இதே திடலில் அடித்துள்ளார்.
போர்ச்சுகலுக்கு எதிராக 22 மீட்டர் துரத்தில் இருந்து இவர் அடித்த கோல் இந்தத் தொடரிலே முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.