100-வது போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் இலங்கை வீரர்!
ரத சப்தமி: சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள்!
காஞ்சிபுரம்: இன்று ரத சப்தமியை முன்னிட்டு காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் என அழைக்கப்படும் வரதராஜ பெருமாள், தங்க சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ரத சப்தமி என்பது, தை அமாவாசை நாளை அடுத்த ஏழாவது நாளில் கொண்டாடப்படுவதாகும், இந்த நாள் சூரியக் கடவுளின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. சூரியன் தெற்கு நோக்கிய தட்சிணாயனம் பயணத்தை முடித்துக்கொண்டு ரத சப்தமியன்று வடக்கு நோக்கி உத்தராயணம் பயணப்படும் தினமே ரத சப்தமி ஆகும்.
இது பருவங்களின் அடிப்படையில், வசந்த காலத்தின் ஆரம்பமாகவும், அறுவடை காலத்தின் தொடக்கமாகவும் உள்ளது.
ரத சப்தமியை முன்னிட்டு காஞ்சிபுரம் அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் பழம் பெருமை வாய்ந்த தேவராஜா பெருமாள் கோவிலில் இன்று ரதசப்தமி விழா கொண்டாடப்பட்டது.
காலையிலேயே கருவறையில் வரதராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம் முடிந்து, உற்சவர் வரதராஜ பெருமாள் வாகன மண்டபம் எனும் அனந்த மண்டபத்தில் தங்க சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார் .
உற்சவ வரதராஜ பெருமாளுக்கு சிகப்பு நிற பட்டாடைகள் உடுத்தி, திருவாபரணங்கள் சூடி சிகப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலான மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை அணிவித்து, தங்க கிரீடம் தரித்து அழகாக காட்சியளித்தார்.
தங்க சூரிய பிரபை வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமானோர் மாடவீதிகளில் நின்று சுவாமிக்கு அர்ச்சனை சேவித்தனர்.
தங்க சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள் கோவிலை சுற்றியுள்ள நான்கு மாட வீதிகளை வளம் வந்தநிலையில், கோயிலே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.