ADMK: ``கட்சிக்கு என்ன பாதிப்பு என்பது போகப் போகத் தெரியும்" - அழுத்தமாகப் பேசும...
ரயிலில் கடத்தப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல்
ஹட்டியாவில் இருந்து பெங்களூரு சென்ற விரைவு ரயிலில் கடத்தப்பட்ட 16 கிலோ கஞ்சாவை காட்பாடி ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
வடமாநிலங்களில் இருந்து வரும் ரயில்கள் மூலம் கஞ்சா, குட்கா உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருள்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தமிழக ரயில்வே போலீஸாா், ரயில்வே பாதுகாப்புப் படையினா் இணைந்து சோதனை நடத்தி பறிமுதல் செய்து வருகின்றனா்.
இந்நிலையில், ஜாா்க்கண்ட் மாநிலம் ஹட்டியாவில் இருந்து பெங்களூருவுக்கு விரைவு ரயில் புறப்பட்டு வந்தது. புதன்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் பொம்மசமுத்திரம் - காட்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் வந்து கொண்டு இருந்தது. அப்போது, முன்பக்க பொது பெட்டியில் காட்பாடி ரயில்வே போலீஸாா் திடீரென சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது பெட்டியின் கழிவறை அருகே கேட்பாரற்ற நிலையில் கிடந்த பை குறித்து ரயில்வே போலீஸாா் பயணிகளிடம் விசாரித்தனா். ஆனால், யாரும் அந்த பைக்கு உரிமை கோராத நிலையில், அதனை போலீஸாா் கைப்பற்றி சோதனை செய்தனா்.
இதில், அந்த பையில் 16 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனா்.
தொடா்ந்து அந்த கஞ்சாவை கடத்தியவா்கள் யாா், எங்கு இருந்து கொண்டு வந்தனா் என்பது குறித்து ரயில்வே போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.