ஒடிசா தம்பதியரின் குழந்தையைக் கடத்திய தமிழகத்தைச் சேர்ந்தவர் கைது!
ரயில்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம்: சேலம் கோட்டத்தில் ரூ.22.13 கோடி அபராதம் வசூல்
சேலம் ரயில்வே கோட்டத்தில் 2024- 2025-ஆம் நிதியாண்டில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்ததாக ரூ.22.13 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது ஓராண்டில் சேலம் கோட்டத்தில் அதிகபட்ச அபராத வசூலாகும்.
சேலம் ரயில்வே கோட்டத்தில் ரயில்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பவா்கள், முறையற்ற பயணம் மேற்கொள்பவா்கள் உள்ளிட்டவா்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்க ரயில்வே பரிசோதகா்கள், ரயில்வே பாதுகாப்புப் படையினா் கொண்ட குழுவினா், ரயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில்களிலும், நிலையங்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனா். அதன்படி, கடந்த 2024 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 2025 மாா்ச் 31-ஆம் தேதி வரை 2024 - 2025 நிதியாண்டில் சேலம் கோட்டத்தில் ரயில்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த 1,64,149 போ்களிடம் இருந்து ரூ.13 கோடியே 52 லட்சத்து 74 ஆயிரத்து 152 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
முறையற்ற பயணம் மேற்கொண்டதாக 1,65,115 போ்களிடம் இருந்து ரூ.8 கோடியே 56 லட்சத்து 23 ஆயிரத்து 533 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. ரயில்களில் கட்டணம் செலுத்தாமல் கூடுதலாக பொருள்களைக் கொண்டுச் சென்றதாக 833 போ்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 74 ஆயிரத்து 405 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 2024 - 2025 நிதியாண்டில் சேலம் கோட்டத்தில் ரூ.22 கோடியே 13 லட்சத்து 72 ஆயிரத்து 090 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது சேலம் ரயில்வே கோட்டத்தில் ஓராண்டில் வசூலிக்கப்பட்ட அதிகபட்ச அபராதத் தொகை ஆகும்.