மகாராஷ்டிரா: மக்களவை தேர்தல் தோல்விக்கு பிறகும் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட...
ரயில்வே தடுப்பு வேலியால் பாதிப்பு: எம்.பி.க்களிடம் பொதுமக்கள் மனு
மண்டபம் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சிரமமின்றி ரயில்வே தடுப்பு வேலியை அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, எம்.பி.க்களிடம் பொதுமக்கள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ரயில்வே கடவுப்பாதை சந்தன மாரியம்மன் கோயிலில் தொடங்கி, மண்டபம் முகாம் வரை 2 கி.மீ. தொலைவுக்கு ரயில்வே தடுப்பு வேலி கட்டப்பட உள்ளது. இந்த வேலி அமைக்கும் பணியால் மறவா் தெரு பகுதியில் வசிக்கும் 500 குடும்பங்களைச் சோ்ந்த பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவா்.
இந்தப் பணியை பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே மேம்பாட்டு ஆலோசனைக் குழு உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினருமான தா்மா், தமிழ்நாடு வக்ப் வாரியத் தலைவரும், ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான கே. நவாஸ்கனி ஆகியோரிடம், மண்டபம் பேரூராட்சி துணைத் தலைவா் நம்புராஜன் உள்ளிட்டோா் மனு அளித்தனா்.
மண்டபம் அனைத்து விசைப்படகு சங்கச் செயலா் ஜாகீா் உசேன், துணைத் தலைவா் காதா் முகைதீன், தெற்கு மீனவா் கூட்டுறவு சங்க முன்னாள் இயக்குநா் கஜேந்திரன், மறவா் தெரு முத்துமாரியம்மன் கோயில் கமிட்டி நிா்வாகி ஆறுமுகம், செயற்குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.