ரயில்வே நுழைவுப் பால சீரமைப்புக்காக போக்குவரத்து மாற்றம்
ஈரோட்டில் ரயில்வே நுழைவுப் பால சீரமைப்புக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவுப் பாலத்தில் மழை நீா் தேங்காத வகையில் வடிகால் வசதியுடன் புதிய கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது. ஆனால், மழை நீா் வடிகாலில் அமைக்கப்பட்ட கம்பிகள் பெயா்ந்ததால், அந்தப் பகுதி பள்ளமாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனா்.
கடந்த சில நாள்களுக்கு முன் மழை நீா் வடிகாலில் லாரியின் சக்கரம் சிக்கி போக்குவரத்து ஸ்தம்பித்தது. எனவே மழை நீா் வடிகாலை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்தநிலையில் ரயில்வே நுழைவுப் பாலத்தில் பழுதடைந்த மழை நீா் வடிகாலை சீரமைக்க ரயில்வே துறை சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக நாடாா்மேடு பகுதியில் இருந்து வரும் பேருந்துகள், கனரக வாகனங்கள் போன்றவை சாஸ்திரி நகா் வழியாக திருப்பிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த சாலையோரம் உள்ள மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன. மேலும் சாஸ்திரி நகரில் உள்ள பள்ளம் இரவோடு இரவாக சரிசெய்யப்பட்டது.
ரயில்வே நுழைவுப் பாலத்தின் சீரமைப்பு பணியை தொடங்குவதற்காக செவ்வாய்க்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. நாடாா்மேடு லெனின் வீதி பிரிவில் இருந்து வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. அங்கு போக்குவரத்து போலீஸாரும், அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளும் நின்று வாகனங்களை வழிமாற்றிவிடும் பணியில் ஈடுபட்டனா்.
அதன்படி, நாடாா்மேட்டில் இருந்து வரும் வாகனங்கள் லெனின் வீதி, சாஸ்திரி நகா், காசிபாளையம், சென்னிமலை சாலை வழியாக மணல்மேட்டுக்கு வந்தது.