ரயில் நிலையத்தில் இந்திக்கு பதிலாக ஆங்கில எழுத்தை அழித்த திமுகவினர்... வைரலாகும் வீடியோ
மும்மொழி கல்விக்கொள்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், கடந்த இரு தினங்களாக ரயில் நிலையத்தில் உள்ள ஊர் பலகைகளில் ஹிந்தி பெயர் எழுத்துகளை தி.மு.க.வினர் கருப்பு மை பூசி அழித்து ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, பாவூர்சத்திரம், செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில் ரயில் நிலையங்களில் ஊர் பெயர் பலகையில் உள்ள ஹிந்தி பெயரெழுத்துகளை அளித்தனர். இதன் ஒருபகுதியாக கடையநல்லூர் ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழிப்பதற்காக கடையநல்லூர் நகர தி.மு.க.வினர் வந்திருந்தனர்.

மத்திய அரசுக்கு எதிராகவும், ஹிந்தி திணிப்புக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பியவாறே ஊர் பலகையில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை அழிக்க திமுகவினர் முற்பட்டனர். அப்போது இந்தி எழுத்துகளுக்கு பதிலாக, கடையநல்லூர் பெயர் பலகையில் உள்ள ஆங்கில எழுத்தின் மீது தி.மு.க.வினர் கருப்பு மை பூசி அழித்தனர். இதைப்பார்த்த கட்சிக்காரர்கள் கூச்சல் போட்டு ஹிந்தி எழுத்தை அடையாளம் காண்பிக்க, அதன்பிறகு சரியாக இந்தி எழுத்தின் மீது கருப்பு மை பூசினர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதை பார்த்த நெட்டிசன்கள், `இந்தி எது? இங்கிலீஷ் எதுவென்றே தெரியாமல் தி.மு.க.வினர் போராட்டம் நடத்துகின்றனர்' என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
