ரயில் நிலைய சிசிடிவி காட்சிகளை பகுப்பாய்வு செய்யும் போலீஸாா்
புது தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து ஞாயிற்றுக்கிழமை விசாரணையைத் தொடங்கிய தில்லி போலீஸாா், குழப்பம் ஏற்படுவதற்கு முந்தைய நிகழ்வுகளின் வரிசையைக் கண்டறிய சிசிடிவி காட்சிகளை பகுப்பாய்வு செய்வதாகக் கூறினா்.
மேலும், விசாரணை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தாா்.
‘பாதிக்கப்பட்டவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு எங்கள் குழுக்கள் தகவல் தெரிவித்து வருகின்றன. நாங்கள் ஏற்கெனவே விசாரணை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளோம் என்று அந்த அதிகாரி கூறினாா்.
‘நெரிசலுக்கு முக்கியக் காரணம் என்ன என்பதை விசாரிப்பதே எங்கள் முக்கிய இலக்கு. அந்த நேரத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் அனைத்து தரவுகளையும் நாங்கள் சேகரிப்போம்’ என்று போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 போ் உயிரிழந்தனா். அதற்கு முன்னதாக, ரயில் நிலையத்தின் 14 மற்றும் 15-ஆவது நடைமேடையில் - மகா கும்பமேளா நடைபெறும் - பிரயாக்ராஜுக்கு ரயில்களில் ஏற காத்திருந்த பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதைத் தொடா்ந்து ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 18 போ் உயிரிழந்துள்ளனா்.
இறந்தவா்கள் ஆஷா தேவி (79), பிங்கி தேவி (41), ஷீலா தேவி (50), வ்யோம் (25), பூனம் தேவி (40), லலிதா தேவி (35), சுருச்சி (11), கிருஷ்ணா தேவி (40), விஜய் சா (15), நீரஜ் (12), சாந்தி தேவி (40), பூஜா குமாரி (8), சங்கீதா மாலிக் (34), பூனம் (34), மம்தா ஜா (40), ரியா சிங் (7), பேபி குமாரி (24) மற்றும் மனோஜ் (47) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.