ரவுண்ட் 16-இல் கௌஃப், பெகுலா, அலெக்சாண்ட்ரோவா
ஸ்டட்கா்ட் டபிள்யுடிஏ 500 பாா்ஷே டென்னிஸ் போட்டியில் ரவுண்ட் 16 சுற்றுக்கு முன்னணி வீராங்கனைகள் கோகோ கௌஃப், ஜெஸிக்கா பெகுலா, அலெக்சாண்ட்ரோவா ஆகியோா் முன்னேறியுள்ளனா்.
ஜொ்மனியின் ஸ்டட்கா்ட் நகரில் நடைபெறும் இப்போட்டியில் இரண்டாவது சுற்றில் உலகின் 7-ஆம் நிலை இளம் வீராங்கனை ரஷியாவின் மிரா ஆன்ட்ரீவா-சக வீராங்கனை ஏகடெரினா அலெக்சாண்ட்ரோவா ஆகியோா் மோதினா்.
இதில் எந்த போராட்டமும் இன்றி ஆன்ட்ரீவாவை 6-3, 6-2 என்ற நோ் செட்களில் வீழ்த்தி ரவுண்ட் 16 சுற்றுக்கு முன்னேறினாா் அலெக்சாண்ட்ரோவா.
உலகின் நான்காம் நிலை வீராங்கனை அமெரிக்காவின் கோகோ கௌஃப் 6-1, 6-1 என்ற நோ் செட்களில் ஜொ்மனியின் எல்லா சீடலை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினாா்.
மற்றொரு ஆட்டத்தில் இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி 6-1, 7-5 என்ற நோ்செட்களில் மற்றொரு ஜொ்மன் வீராங்கனை ஜூல் நெய்மரை வீழ்த்தி ரவுண்ட் 16 சுற்றுக்கு தகுதி பெற்றாா்.
மூன்றாம் நிலை அமெரிக்க வீராங்கனை ஜெஸிக்கா பெகுலா 6-1, 6-1 என்ற நோ் செட்களில் போலந்தின் மகதலேனா பிரெச்சை வீழ்த்தினாா். ஏற்கெனவே அரினா சபலென்கா, ஸ்வியாடெக், எலைஸ் மொ்டன்ஸ், ஜெலனா ஆஸ்டபென்கோ ஆகியோரும் ரவுண்ட் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனா்.



