Aamir Khan: "நான் இப்படத்திற்கு கதை, பணம் என எதையும் கேட்கவில்லை, காரணம்" - ஆமீர...
ரஷிய எல்லையில் 2 நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த டிரம்ப் உத்தரவு!
ரஷிய எல்லையில் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
ரஷியா - உக்ரைன் போரை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சிகள் பலனளிக்காததால், ரஷியா மீது பொருளாதார தடையை அமெரிக்க அரசு விதித்து வருகின்றது. ரஷியாவிடம் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றது.
டிரம்பின் எச்சரிக்கையை மீறி ரஷியாவிடம் இருந்து அதிகளவிலான கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் காரணத்தால் இந்தியாவுக்கு 25% வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.
மேலும், இந்தியா மற்றும் ரஷியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த பொருளாதாரங்கள் என்று டிரம்ப் விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், ரஷிய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவரும் முன்னாள் அதிபருமான டிமிட்ரி மெட்வெடே, டிரம்புக்கு பதிலளித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“ரஷியாவுக்கு 50 நாள்கள், 10 நாள்கள் எனக் கெடு விதிக்கும் விளையாட்டை டிரம்ப் விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் இரண்டு விஷயங்களை புரிந்துகொள்ள வேண்டும். ரஷியா இஸ்ரேலோ ஈரானோ கிடையாது. ஒவ்வொரு இறுதி எச்சரிக்கையும் ஒரு அச்சுறுத்தலாகும். போரை முன்னோக்கி எடுத்துச் செல்லும். ரஷியா - உக்ரைன் இடையே அல்ல, அவரது சொந்த நாட்டுடன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் டிரம்ப் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”ரஷியாவின் முன்னாள் அதிபரும் தற்போதைய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவின் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களை ரஷியாவுக்கு பொருத்தமான பகுதிகளில் நிலைநிறுத்த உத்தரவிட்டுள்ளேன்.
வார்த்தை மிகவும் முக்கியமானவை. அவை எதிர்பாராத விளைவுகளுக்கு வழிவகுக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், எந்த பகுதிக்கு நீர்மூழ்கிக் கப்பல் அனுப்பப்பட்டுள்ளது, அணு ஆயுத தாக்குதல் நடத்தக் கூடிய கப்பல்களா என்பது குறித்து டிரம்ப் தெரிவிக்கவில்லை.