Aus v Ind : 'கோமாளி கோலி' - கோலியை கடுமையாகச் சாடும் ஆஸ்திரேலிய ஊடகங்கள்; காரணம்...
ராஜபாளையம்: போதையில் பெண் போலீஸிடம் பாலியல் அத்துமீறல்; எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்!
பெண் போலீஸிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சிறப்பு சார்பு ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து விருதுநகர் மாவட்ட காவல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தொம்பக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 52). ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
தற்போது ராஜபாளையம் மலையடிபட்டி காவலர் குடியிருப்பில் வசித்து வரும் மோகன்ராஜூக்கு திருமணம் ஆகி மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். எஸ்.எஸ்.ஐ. மோகன்ராஜ் மதுப்பழக்கம் உடையவர். இந்தநிலையில் மது அருந்தி விட்டு போதை தலைக்கேறிய நிலையில் காவல் நிலையத்திற்கு எஸ்.எஸ்.ஐ மோகன்ராஜ், பணிக்கு வந்துள்ளார். இதைப்பார்த்த சக போலீஸார் அவரை மாடியில் உள்ள அறையில் சென்று அமருமாறு மேலே அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சென்ற மோகன்ராஜ் தன்னுடன் பணியாற்றும், பெண் போலீஸ் ஒருவரை நெருங்கி பேச்சு கொடுத்துள்ளார். மோகன்ராஜ் போதையில் இருப்பதை அறிந்த அந்த பெண் போலீஸ் அவரிடம் இருந்து விலக முயற்சித்தார். அப்போது எஸ்.எஸ்.ஐ. மோகன்ராஜ், பெண் போலீஸிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் போலீஸ் கூச்சல் போடவும் கீழே இருந்த சக போலீஸார் மாடிக்கு சென்று அவரை பத்திரமாக மீட்டனர். பெண் போலீஸிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காட்சிகள் காவல் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராவிலும் பதிவானது. இதையடுத்து தன்னிடம் அத்துமீறலில் ஈடுபட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் மோகன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கும்படி உயரதிகாரிகளிடம் பெண் போலீஸ் புகார் அளித்தார். அதன்பேரில், எஸ்.எஸ் ஐ. மோகன்ராஜை மருத்துவ பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போலீஸார், அவரை பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதில் மோகன்ராஜ், மது போதையில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன், சரக துணை காவல் கண்காணிப்பாளர் ப்ரீத்தி ஆகியோருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது.
அதன்பேரில் சிறப்பு சார்பு ஆய்வாளர் மோகன்ராஜை உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன், உத்தரவிட்டார். மேலும் அவர்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டதையடுத்து எஸ்.எஸ்.ஐ மோகன்ராஜ் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்" என்றனர்.