இந்திய மாணவா்களின் அமெரிக்க விசா ரத்து: எஸ்.ஜெய்சங்கா் நடவடிக்கை எடுப்பாரா? காங...
ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!
ஆவினில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் செவ்வாய்க்கிழமை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்ததாக விஜய் நல்லதம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது தனித்தனியாக இரு வழக்குகள் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தற்போது ஜாமீனில் உள்ளார். இந்த வழக்கில் மேல் விசாரணைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் விசாரணை நடைபெறாமல் இருந்து வந்தது.
வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கக் கோரி, ரவீந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. சிபிஐ விசாரணைக்கு தடை கோரி தமிழக அரசு மற்றும் ராஜேந்திர பாலாஜி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் மேல்விசாரணைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி அளித்த நிலையில், செவ்வாய்க்கிழமை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்.2ல் ஆன்லைன் மூலம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.