ராணிப்பேட்டை: காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - முக்கிய குற்றவாளி சுட்டுப் பிடிப்பு!
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் காவல் நிலையத்துக்கு நேற்று(பிப். 2) நள்ளிரவு 12.00 மணியளவில் இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள் இரண்டு பெட்ரோல் குண்டுகளை காவல் நிலையத்தின் மீது வீசிச் சென்றனர்.
நள்ளிரவில் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
ராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை, முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஹரி என்பவரை கைது செய்து இன்று(பிப். 3) விசாரணைக்காக அழைத்துச் செல்லும் வழியில், காவேரிப்பாக்கம் அருகே சிறுநீர் கழிப்பதற்காக ஹரியை கீழே இறக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது அவர் தன்னிடம் இருந்த ஒரு கத்தியால் காவல் அதிகாரி முத்தீஸ்வரனை குத்திவிட்டு தப்பியோட முயற்சித்ததாகவும், இதனையடுத்து ஹரி தப்பிவிடாமல் இருப்பதற்காக காவல் துறை அதிகாரிகள் ஹரியின் காலில் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டுள்ள ஹரிக்கு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அதே மருத்துவமனையில், கத்திக்குத்தில் காயப்பட்ட காவல் அதிகாரியும் சிகிச்சை பெற்று வருகிறார்.