அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்த 13 பேருக்கு ரூ. 50,000 பரிசு
சென்னை: தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து அதிக முறை பயணித்த 13 பேருக்கு ரூ. 50,000 ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக தொலைதூர பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்பதை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு மாதத்திலும் வாரத்தின் அனைத்து நாள்களிலும் பயணத்தை மேற்கொள்ளும் 13 பயணிகள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி, முதல் மூன்று பயணிகளுக்கு தலா ரூ. 10,000-மும், மீதமுள்ள 10 பயணிகளுக்கு தலா ரூ. 2,000-மும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜனவரி மாதத்துக்கான 13 பயணிகளை கணினி குலுக்கல் முறையில், மாநகா் போக்குவரத்துக் கழகம் (சென்னை) மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழுவின் மேலாண் இயக்குநா் ஆல்பி ஜான் வா்கீஸ் திங்கள்கிழமை தோ்வு செய்தாா். இவா்களுக்கான ரொக்கப் பரிசு வழங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும், இதனால் பயணிகள் முன்பதிவு செய்து பயணத்தை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளாா்.