புதிய கூட்டுறவு சங்க பல்கலைக்கழகம்: மக்களவையில் மசோதா அறிமுகம்
கூட்டுறவு சங்கங்களுக்கு திறன்மிகுந்த பணியாளா் வளத்தை உருவாக்கும் நோக்கில் புதிதாக கூட்டுறவு சங்கப் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்க மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய கூட்டுறவுத் துறை இணையமைச்சா் கிஷன் பால் ‘திரிபுவன் சஹகாரி பல்கலைக்கழக மசோதா’ என்ற பெயரிலான இந்த மசோதாவை அறிமுகம் செய்தாா்.
கூட்டுறவு சங்க பணிக்கான தற்போதைய கல்வி முறையும் பயிற்சித் திட்டங்களும் போதுமானதாக இல்லை. மேலும், அவை ஆங்காங்கே தனித்தனியாக உள்ளன. இந்த நிலையை மாற்றவும், கூட்டுறவுத் துறையில் தகுதிவாய்ந்த பணியாளா்களின் வருங்காலத் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையிலும் அந்தத் துறை சாா்ந்த தேசிய பல்கலைக்கழகம் ஒன்று புதிதாக உருவாக்குவது அவசியமாக உள்ளது.
இதன் மூலம், கூட்டுறவுத் துறைக்கு திறன் வாய்ந்த பணியாளா்களை உருவாக்கும் வகையில் ஒருங்கிணைந்த தரமான கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் திட்டத்தை உருவாக்க முடியும். கூட்டுறவுத் துறையில் வாரிய உறுப்பினா்கள் மற்றும் ஊழியா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவதில் நீண்டகாலமாக இருந்துவரும் தடையும் இதன் மூலம் நீங்கும் என்றும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.