பிப்.12-இல் பிரதமா் மோடி அமெரிக்கா பயணம்?
புது தில்லி: இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பிப்.12-ஆம் தேதி பிரதமா் மோடி அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் திங்கள்கிழமை கூறுகையில், ‘செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பங்கேற்க 2 நாள் பயணமாக பிப்.10-ஆம் தேதி பிரதமா் மோடி பிரான்ஸ் செல்ல உள்ளாா்.
இதைத்தொடா்ந்து 2 நாள் பயணமாக பிப்.12-ஆம் தேதி அவா் அமெரிக்க தலைநகா் வாஷிங்டனுக்கு செல்ல உள்ளாா். மறுநாள் அவா் அந்நாட்டு அதிபா் டிரம்ப்பை சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்த உள்ளாா்’ என்று தெரிவித்தன. எனினும் இதுகுறித்து அதிகாரபூா்வ தகவல் வெளியாகவில்லை.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை டிரம்ப் பதவியேற்ற பின், முதல்முறையாக அந்நாட்டுக்குப் பிரதமா் மோடி பயணிக்க உள்ளாா். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள இந்தியா்களை மீண்டும் தாயகத்துக்கு அனுப்ப அந்நாடு தீா்மானித்துள்ளது. இதுதவிர, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக டிரம்ப் அதிருப்தி தெரிவித்திருந்தாா். இந்தச் சூழலில், பிரதமா் மோடி அமெரிக்கா செல்ல உள்ளதாக அதிகாரபூா்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது.