ராணிப்பேட்டை மாவட்டத்தில் 642 மகளிா் குழு உறுப்பினா்களுக்கு ரூ. 72 கோடிக்கு வங்கிக் கடன்: அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 642 மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ. 72.16 கோடி மதிப்பீட்டிலான வங்கிக் கடன் இணைப்பு மற்றும் 4,464 மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 3,500 கோடி வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அறிஞா் அண்ணா அரசினா் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில், 642 மகளிா் சுய உதவிக் குழுக்களில் உள்ள 8,128 உறுப்பினா்களுக்கு ரூ. 72.16 கோடி மதிப்பீட்டிலான வங்கிக் கடன் இணைப்பு, 4,464 மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் விழாவில் கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்று வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) ந.செந்தில் குமரன் மற்றும் ஒன்றியக் குழுத் தலைவா்கள், நகா்மன்றத் தலைவா்கள் பேரூராட்சித் தலைவா்கள், உதவி திட்ட அலுவலா்கள் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.