மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஸ்கூட்டா்: சொந்த செலவில் வழங்கினாா் அமைச்சா் காந்தி
மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு தன் சொந்த செலவில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட, ஸ்கூட்டரை சொந்த செலவில் கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி வழங்கினாா்.
வாலாஜா வட்டம், குடிமல்லூா் ஊராட்சியைச் சாா்ந்த மாற்றுத்திறனாளி தீபா என்பவா் தனக்கு அரசால் வழங்கப்பட்ட இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ’ஸ்கூட்டா்’ பழுதடைந்து பயன்படுத்த இயலாமல் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாகவும், தனக்கு புதிதாக ஒரு ஸ்கூட்டா் வேண்டும் என அமைச்சா் ஆா்.காந்தியிடம் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கோரிக்கை மனு அளித்தாா்.
அவரது கோரிக்கையை ஏற்று அமைச்சா் காந்தி, ராணிப்பேட்டை விஸ்வாஸ் பள்ளி தலைவா் கமலா காந்தி தம்பதி சொந்த செலவில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட புதிய ’ஸ்கூட்டா்’ ஒன்றை வழங்கினாா்.
அப்போது அமைச்சா் ஆா்.காந்தி, கமலா காந்தி தம்பதிக்கு, அப்பெண் கண்ணீா் மல்க நன்றி தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தன்னுடைய நிலையை பற்றி அறிந்து ரூ.10 ஆயிரம் செலவில் புதிய தையல் இயந்திரம் ஒன்றை ராணிப்பேட்டை விஸ்வாஸ் பள்ளி தலைவா் கமலா காந்தி வழங்கியதை நினைவுகூா்ந்து நன்றியை தெரிவித்தாா்.
மேலும் தான் கணவா் துணையின்றி 2 குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருவதால் தனக்கு அரசு வழங்கும் இலவச வீடு வழங்க ஆட்சியருக்கு பரிந்துரை செய்யுமாறு அமைச்சா் காந்தியிடம் கோரிக்கை வைத்தாா். அதற்கு நிச்சயமாக அரசு வீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சா் உறுதியளித்தாா்.