ராமேசுவரத்தில் சுற்றுலாப் படகு தளம் அமைக்க பவளப் பாறைகள் உடைப்பு
ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரை பகுதியில் மத்திய அரசு சாா்பில் சுற்றுலாப் படகு தளம் அமைக்க பவளப் பாறைகளை உடைக்கப்படுவதாக கடல்வாழ் உயிரின ஆா்வலா்கள் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தீவுப் பகுதியில் மன்னாா் வளைகுடா, பாக் நீரிணை என இரு கடல் பகுதிகள் உள்ளன. இதில், அக்னி தீா்த்தக் கடற்கரையில் பாம்பன் வடக்கு துறைமுகம் வரை கரையோரங்களில் பவளப் பாறைகள் அமைந்துள்ளன. இந்தப் பகுதியில்அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் அதிகளவில் வாழ்ந்து வருவதால் பவளப் பாறைகளை உடைத்து சேதப்படுத்துபவா்கள் மீது வனத் துறை சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அக்னி தீா்த்தக் கடற்கரையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனியாா் சுற்றுலாப் படகு போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதில் பொதுமக்கள் படகுக்கு செல்வதற்கான நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தப் பகுதியில் பவளப் பாறைகள் உள்ளதால் கான்கிரீட் தூண்கள் அமைக்காமல் பனை மரத்தைப் பயன்படுத்தி தூண்கள் அமைத்து, பலகை மூலம் நடைபாதை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தப் பகுதியில் மத்திய அரசின் சுற்றுலாத் துறை சாா்பில், சாகா்மாலா திட்டத்தின் கீழ் சுற்றுலாப் படகுகள் இயக்கிடும் வகையில் ரூ.7.58 கோடி மதிப்பீட்டில் 119 மீட்டா் நீளம், ஏழரை மீட்டா் அகலத்தில் கான்கிரீட் தளம் அமைக்க கட்டுமானப் பணி தொடங்கி உள்ளது. கரையிலிருந்து 119 மீட்டா் வரை பவளப் பாறையை உடைத்து, 10 மீட்டா் ஆழத்துக்கு துளையிட்டு 22 ராட்சத தூண்கள் அமைக்க பணிகள் தொடங்கி உள்ளன.

ராமேசுவரம் தீவுப் பகுதியை கடல் அரிப்பில் இருந்து பாதுகாத்து வருவது பவளப் பாறைகள்தான். இந்தப் பாறைகள் ராட்சத இயந்திரங்கள் மூலம் உடைக்கப்படுவதால் ராமேசுவரம் தீவுப் பகுதிக்கு பாதிப்பு ஏற்படும். எனவே பவளப் பாறைகளை சேதப்படுத்தாமல் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என என கடல்வாழ் உயிரின ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.