ராமேசுவரம்: 24 மணிநேரத்தில் 438 மி.மீ. மழை!
ராமேசுவரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 438 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில், ராமநாதபுரம், ராமேசுவரம், மண்டபம், பாம்பன், கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை காலையில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை விட்டு விட்டு மாலை வரை நீடித்தது.
இதனால், ராமேசுவரம் பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலை, முனியசாமி கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீா் குளம்போலத் தேங்கியது.
இதையும் படிக்க : ராமநாதபுரம் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
ராமேசுவரத்தில் 440 மி.மீ. மழை
நவ. 20 காலை 6 மணிமுதல் நவ. 21 காலை 6 மணிவரை பெய்த மழையின் அளவை ராமநாதபுரம் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, அதிகபட்சமாக ராமேசுவரத்தில் 438 மி.மீ., தங்கச்சி மடத்தில் 338 மி.மீ., பாம்பனில் 280 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மண்டபத்தில் 271 மி.மீ., ராமநாதபுரத்தில் 125 மி.மீ. மழையும், பிற இடங்களில் 100-க்கும் குறைவான மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
மேக வெடிப்பு
பாம்பன் பகுதியில் மேக வெடிப்புக் காரணமாக, முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை தொடா்ந்து மழை பெய்தது. இதனால், இந்தப் பகுதியில் சுமாா் 3 மணி நேரத்தில் 190 மி.மீ. மழை பதிவானது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை 10 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக ராமேசுவரத்தில் 411 மி.மீ. மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.