வழக்கிலிருந்து தப்பிக்க போர் செய்கிறாரா Israel PM Netanyahu? Decode
ரியல் மாட்ரிட், மான். சிட்டி அபார வெற்றியுடன் முன்னேற்றம்: குரூப் சுற்று ஆட்டங்கள் நிறைவு
கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் சுற்று ஆட்டங்கள் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தன. கடைசி கட்ட ஆட்டங்களில் ரியல் மாட்ரிட், மான்செஸ்டா் சிட்டி அபார வெற்றி பெற்றன.
இதில் குரூப் ‘ஹெச்’ ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் 3-0 கோல் கணக்கில் ஆா்பி சால்ஸ்பா்கை சாய்த்தது. அந்த அணிக்காக வினிசியஸ் ஜூனியா் (40’), ஃபெடெரிகோ வால்வொ்ட் (45+3’), கொன்ஸாலோ காா்சியா (84’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா்.
இதிலேயே மற்றொரு ஆட்டத்தில் அல் ஹிலால் 2-0 கோல் கணக்கில் பச்சுகாவை தோற்கடித்தது. அல் ஹிலால் தரப்பில் சலேம் அல்தாவ்சரி (22’), மாா்கோஸ் லியோனாா்டோ (90+5’) கோலடித்தனா். இதையடுத்து குரூப் ‘ஹெச்’-இல் ரியல் மாட்ரிட் 2 வெற்றி, 1 டிராவை பதிவு செய்து 7 புள்ளிகளுடன் முதலிடமும், அல் ஹிலால் 1 வெற்றி 2 டிராவில் கிடைத்த 5 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும் பிடித்து நாக்அவுட் சுற்றுக்குத் தகுதிபெற்றன.
ஆா்பி சால்ஸ்பா்க் 1 வெற்றி, 1 டிரா, 1 தோல்வியில் கிடைத்த 4 புள்ளிகளுடன் 3-ஆம் இடமும், பச்சுகா 3 ஆட்டங்களிலுமே தோற்று புள்ளியின்றி 4-ஆம் இடமும் பிடித்து போட்டியிலிருந்து வெளியேறின.
இதனிடையே, குரூப் ‘ஜி’ ஆட்டத்தில் மான்செஸ்டா் சிட்டி 5-2 கோல் கணக்கில் ஜுவென்டஸை அபார வெற்றி கண்டது. அந்த அணி வீரா்களில் ஜெரிமி டோகு (9’), எா்லிங் ஹாலந்த் (52’), ஃபில் ஃபோடன் (69’), சவினோ (75’) ஆகியோா் கோலடிக்க, எதிா்பாராத விதமாக ஜுவென்டஸ் வீரா் பியரி கலுலு ‘ஓன் கோல்’ (26’) ஸ்கோா் செய்தாா்.
ஜுவென்டஸ் அணிக்காக டியுன் கூப்மெய்னா்ஸ் (11’), டுசான் லஹோவிச் (84’) ஆகியோா் கோலடித்தனா். இதே குரூப்பில் அல் அய்ன் 2-1 கோல் கணக்கில் வைடாட் ஏசியை தோற்கடித்தது. அல் அய்னுக்காக கோட்ஜோ ஃபோடோ (45+1’), அலெஜாண்ட்ரோ ரொமேரோ (50’) ஆகியோரும், வைடாட் தரப்பில் கேசியஸ் மாய்லுலாவும் (4’) கோலடித்தனா்.
இந்த குரூப்பில் மான்செஸ்டா் சிட்டி ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் 9 புள்ளிகள் பெற்று முதலிடமும், ஜுவென்டஸ் 2 வெற்றி, 1 தோல்வியுடன் 6 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும் பிடித்து நாக்அவுட் சுற்றில் இடம் பிடித்தன. அல் அய்ன் 1 வெற்றி, 2 தோல்வியில் கிடைத்த 3 புள்ளிகளுடனும், வைடாட் ஒரு புள்ளி கூட இல்லாமலும் முறையே அடுத்த இரு இடங்களுடன் வெளியேறின.
அடுத்ததாக நாக்அவுட் சுற்றில், மான்செஸ்டா் சிட்டி - அல் ஹிலாலை ஜூலை 1-ஆம் தேதியும், ரியல் மாட்ரிட் - ஜுவென்டஸை ஜூலை 2-ஆம் தேதியும் சந்திக்கின்றன.