ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்: ``ரூ2000 கோடி வங்கி மோசடி'' - அனில் அம்பானி மீது வழக்கு தொடர்ந்த சிபிஐ
மோசடி புகார்
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்.காம்) மற்றும் அதன் விளம்பரதாரர் இயக்குனர் அனில் அம்பானி மீது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) ரூ2000 கோடிக்கு மேல் இழப்பை ஏற்படுத்தியதாக வங்கி மோசடி புகார் அளித்திருக்கிறது.
கடந்த மாதம் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் அளித்த எழுத்துப்பூர்வ தகவலில், ''ஆர்.காம்-மில் எஸ்.பி.ஐ-யின் கடன் ஆகஸ்ட் 26, 2016 முதல் அசல் தொகையாக ரூ.2,227.64 கோடியும், வட்டி மற்றும் இதர செலவுகளாக ரூ786.52 கோடியும் வழங்கவேண்டும்" எனக் குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து, எஸ்.பி.ஐ வங்கி, ரிசர்வ் வங்கியின் மோசடி ஆபத்து மேலாண்மை வழிமுறைகள் மற்றும் வங்கியின் கொள்கையின்படி, ஆர்.காம் நிறுவனம் ஜூன் 13, 2025 அன்று மோசடி செய்ததாக வகைப்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, ஜூன் 24, 2025 அன்று வங்கி, இந்த மோசடி வகைப்பாட்டை ரிசர்வ் வங்கியிடம் தெரிவித்து, சி.பி.ஐ-யிடம் புகார் அளித்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ), அனில் அம்பானியின் வீடு மற்றும் ஆர்.காம் நிறுவனத்துடன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
திவால்நிலை
ஆர்.காம் நிறுவனம், திவால்நிலை மற்றும் திவால்நிலைச் சட்டம், 2016-ன் கீழ் கார்ப்பரேட் திவால்நிலைத் தீர்வு செயல்முறைக்கு உட்பட்டுள்ளது.

இதற்கான தீர்வுத் திட்டம் கடன் வழங்குநர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு, மார்ச் 6, 2020 அன்று மும்பையில் உள்ள தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தில் (NCLT) தாக்கல் செய்யப்பட்டது.
இந்தத் தீர்வுத் திட்டம் NCLT-யின் ஒப்புதல் இன்னும் வழங்கப்படவில்லை. மேலும், எஸ்.பி.ஐ வங்கி, அனில் அம்பானிக்கு எதிராக தனிப்பட்ட திவால்நிலைத் தீர்வு செயல்முறையை IBC-யின் கீழ் தொடங்கியுள்ளது. இதுவும் மும்பை NCLT-யால் விசாரிக்கப்பட்டு வருகிறது.