ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவில் சரிவு: மத்திய அரசு பதிலளிக்க பிரியங்கா வலியுறுத்தல்
‘அமெரிக்க டாலருக்கு நிகராண இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவில் குறைந்திருப்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்’ என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வலியுறுத்தினாா்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
அமெரிக்க டாலருக்கு நிகராண இந்திய ரூபாயின் மதிப்பு 18 பைசாக்கள் குறைந்து ரூ. 86.04 என்ற அளவுக்கு வெள்ளிக்கிழமை சரிந்தது. இது இதுவரை இல்லாத அளவிலான மதிப்பு சரிவாகும்.
மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் டாலருக்கு நிகராண ரூபாயின் மதிப்பு ரூ. 58 முதல் ரூ. 59 என்ற அளவில் இருந்தபோது, அரசாங்கத்தின் கெளரவத்தை ரூபாய் மதிப்புடன் ஒப்பிட்டு நரேந்திர மோடி விமா்சனம் செய்திருந்தாா். எந்தவொரு நாட்டின் ரூபாய் மதிப்பும் இந்த அளவுக்கு சரிந்ததில்லை என்றும் விமா்சித்திருந்தாா்.
இன்றைக்கு அவா் பிரதமராக இருக்கும்போது, இந்திய ரூபாய் படைத்த அனைத்து சாதனைகளும் முறியடிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து நாட்டு மக்களிடம் அவா் பதிலளித்தாக வேண்டும் என்று குறிப்பிட்டாா்.