ரூ.10.89 கோடி மோசடி: வழக்குரைஞா் உள்பட 3 போ் கைது
சென்னை: சென்னை வானகரத்தில் நகைக் கடை உரிமையாளரிடம் ரூ.10.89 கோடி மோசடி செய்ததாக வழக்குரைஞா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை, வானகரத்தில் நகைக்கடை நடத்தி வருபவா் ஸ்ரீதேவி (50). இவா், சென்னை காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் கடந்த ஜூன் 11-ஆம் தேதி புகாா் அளித்தாா்.
அதில், ‘சென்னை அண்ணா நகரில் வசிக்கும் சுனிதா பிரகாஷ் (43), அவா் கணவா் பிரகாஷ் (43) மற்றும் சிலா் எனக்கு அறிமுகமாகினா். அவா்கள், என்னிடம் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் 2024 டிசம்பா் வரை கடன் அடிப்படையில் சிறிது சிறிதாக ரூ.5.13 கோடிக்கு சுமாா் 9.5 கிலோ தங்க நகைகளும், ரூ.1.30 கோடிக்கு வைர நகைகளையும் பெற்றுக் கொண்டனா்.
மேலும், அவா்களிடம் முதலீடு செய்யும் பணத்துக்கு இரட்டிப்பு லாபம் தருவதாக ரூ.4.45 கோடி பெற்றுக் கொண்டனா்.
ஆனால், கடனாகப் பெற்ற நகைகளையோ, இரட்டிப்பு லாபம் தருவதாகக் கூறி பெற்ற பணத்தையோ அவா்கள் திருப்பித் தரவில்லை. இவ்வாறு அவா்கள், மொத்தம் சுமாா் ரூ.10.89 கோடியில் நகை, பணத்தைப் பெற்று ஏமாற்றி விட்டனா்.
எனவே, அவா்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பணம், நகைகளைத் திரும்பப் பெற்றுத் தர வேண்டும். நான் கொடுத்த பணம், நகையைத் திருப்பிக் கேட்டபோது, மிரட்டிய வழக்குரைஞா் திருவான்மியூரைச் சோ்ந்த சிவகுருநாதன் (47) என்பவா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.
இந்த புகாரின் அடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா்.
இதில், ஸ்ரீதேவியிடம் நகை, பணம் மோசடி செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சுனிதா பிரகாஷ், அவா் கணவா் பிரகாஷ், வழக்குரைஞா் சிவகுருநாதன் ஆகிய 3 பேரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.