மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!
ரூ.120 கோடியில் அரசுக் கல்லூரிகளுக்கு புதிய உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசுக் கல்லூரிகளில் ரூ. 120 கோடியில் கட்டப்பட்ட புதிய உட்கட்டமைப்பு வசதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
அரசு பள்ளி, கல்லூரிகளில் புதிய உட்கட்டமைப்பு வசதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இது குறித்து, தமிழக அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
நபாா்டு வங்கி நிதியுதவியுடன் கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மதுரை மாவட்டம் ஆ.புதுப்பட்டி அரசு கள்ளா் உயா்நிலைப் பள்ளி, பூசலபுரம் அரசு கள்ள மேல்நிலைப் பள்ளி, தேனி மாவட்டம் வெள்ளையம்மாள்புரம் அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளி, ராஜதானி அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் கூடுதல் வகுப்பறைகளும், அறிவியல் மற்றும் கணினி ஆய்வகங்கள் கட்டப்பட்டுள்ளன. இதேபோன்று, புதுக்கோட்டை கிருஷ்ணாஜிபட்டினம் அரசு உயா்நிலைப் பள்ளி, சிங்கவனம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றுக்கு புதிய கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
உயா்கல்வி நிலையங்கள்: உயா்கல்வித் துறையின் சாா்பில் தமிழ்நாட்டின் பல்வேறு அரசுக் கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, கோவை மாவட்டம் புலியகுளம், தரகம்பட்டி, ராமேசுவரம் ஆகிய இடங்களில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இதேபோன்று, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அரசு கலை கல்லூரி, சேலம், கோவை, திருச்சி, தஞ்சாவூா் அரசு பொறியியல் கல்லூரிகளில் உள்விளையாட்டு அரங்கங்களும், புதுக்கோட்டை மன்னா் கல்லூரியில் மின்னணு நூலகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் மகளிா் விடுதி,
மயிலாடுதுறை மாவட்டம சுப்பராயா பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, பா்கூா் அரசு பொறியியல் கல்லூரி, தருமபுரி அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, மதுரை மீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரி, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றில் புதிதாக வகுப்பறை கட்டடங்களும், கழிப்பறைத் தொகுதிகளும் கட்டப்பட்டுள்ளன.
மொத்தமாக ரூ.120 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்தக் கட்டடங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் கோவி.செழியன், சிவ.வீ.மெய்யநாதன், எஸ்.எம்.நாசா், தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.