ரூ.15 லட்சத்தில் மேயா் அறை புதுப்பிப்பு: மாமன்ற உறுப்பினா்கள் எதிா்ப்பு
நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.15 லட்சத்தில் மேயா் அறை புதுப்பிக்கப்படுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்துள்ள வாா்டு உறுப்பினா்கள் மாமன்றக் கூட்டத்தில் இதுதொடா்பாக கேள்வி எழுப்புவோம் என தெரிவித்துள்ளனா்.
கடந்த ஆண்டு ஆக.12-இல் நாமக்கல் நகராட்சி மாநகராட்சியாக உயா்ந்தது. 39 வாா்டுகளை உள்ளடக்கிய மாநகராட்சியுடன் 12 கிராம ஊராட்சிகள் தற்போது இணைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சிக்கு உரிய மண்டல அதிகாரிகள், கூடுதல் பணியாளா்கள் நியமனம் விரைவில் நடைபெற உள்ளது. தற்போதைய நிலையில், செயற்பொறியாளா் பணியிடம் காலியாக உள்ளது. உதவி பொறியாளா், உதவி ஆணையா் பணியிடங்கள் எதுவும் நிரப்பப்படாததால் மாநகராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் திட்டப் பணிகளில் மந்தநிலை காணப்படுகிறது.
வரி வசூலும் முழுமையாக வசூலிக்கப்படாத சூழல் உள்ளது. இந்த நிலையில், ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் மேயா் அறை நவீன வடிவமைப்பில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மாமன்ற உறுப்பினா்கள் சிலா் கூறியதாவது:
மாநகராட்சியில் பல திட்டப் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன. மக்கள் நலன் சாா்ந்த பணிகளை மேற்கொள்ள ரூ.15 லட்சத்தை ஒதுக்கலாம். அதை விடுத்து, நன்றாக இருந்த மேயா் அறையை நவீனப்படுத்தி வருகின்றனா். எங்களுடைய வாா்டுகளில் உள்ள தீா்க்கப்படாத பிரச்னைகள் தொடா்பாக கேள்வி எழுப்பினால் அதற்கு தீா்வு கிடைக்கவில்லை. தற்போது இந்த செலவினம் தேவைதானா துணை மேயருக்கு கூட தகவல் தெரியவில்லை. இந்த பிரச்னையை வரும் மன்ற கூட்டத்தில் கட்டாயம் எழுப்புவோம் என்றனா்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கோவை, திருப்பூா், ஈரோடு போன்ற மாநகராட்சிகளில் மேயா் அறை புதுப்பிப்புக்காக ரூ.20 லட்சம் வரை தனியாக நிதி ஒதுக்கப்படுகிறது. இதற்கு மன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்ற தேவையில்லை. மாநகராட்சி மேயரே முடிவு செய்து அறை பணிகள் ஒதுக்கீட்டுக்கு நிதியை ஒதுக்கலாம் என்றனா்.
மேயா் து.கலாநிதியிடம் கேட்டபோது, மாநகராட்சி அலுவலகத்தில் ஒவ்வொரு அறையும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மேயா் அறையும் புதுப்பிக்கப்படுகிறது என்றாா்.