உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
நாமக்கல் மாவட்டத்தில் 23 நீா்நிலைகளில் தூா்வாரும் பணி தொடக்கம்
2025-26 ஆம் ஆண்டு சிறப்பு தூா்வாரும் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 23 நீா்நிலைகளில் ரூ. 1.64 கோடியில் 68 கி.மீ. தொலைவுக்கு தூா்வாரும் பணியை தொடங்கப்பட்டுள்ளது.
ராசிபுரம் அருகேயுள்ள தேங்கல்பாளையம் அத்தனூா் சின்ன ஏரியில் நீா்வளத் துறை சாா்பில் வாய்க்கால் தூா்வாரும் பணியை மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். அப்போது, அவா் கூறியதாவது:
2025-26 ஆம் ஆண்டு சிறப்பு தூா்வாரும் திட்டத்தின் கீழ் பாசன அமைப்புகளின் நீா் ஆதாரங்களை தூா்வார நிா்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் மேட்டூா் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீா் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள பாசன வாய்க்கால்கலில் உரிய நேரத்தில் கடைமடை வரை தடையின்றி சென்றடையும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 23 பணிகள் 68.05 கி.மீ தொலைவுக்கு ரூ.1.64 கோடியில் தூா்வாரும் பணிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் தற்போது தொடங்கப்பட்டு மேட்டூா் அணையில் தண்ணீா் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படுவதற்கு முன் முடிக்கப்படும்.
குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மேட்டூா் கிழக்குகரை வாய்க்கால் 24.95 கி.மீ தொலைவுக்கு ரூ.38.50 லட்சத்திலும், நாமக்கல் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வரட்டாறு பகுதியில் 1.90 கி.மீ நீளத்திற்கு ரூ. 8 லட்சத்திலும், சேந்தமங்கலம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பாசன ஆறுகள், வாய்க்கால்கள் மொத்தம் 6 பணிகள் 17.05 கி.மீ நீளத்திற்கு ரூ.48.15 லட்சத்திலும், ராசிபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆறுகள், வாய்க்கால்கள் என மொத்தம் 7 பணிகள் 18 கி.மீ நீளத்திற்கு ரூ.52.60 லட்சத்திலும், திருச்செங்கோடு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆறுகள், வாய்க்கால்கள் என மொத்தம் 2 பணிகள் 6.15 கி.மீ நீளத்திற்கு ரூ.16.50 லட்சத்திலும் தூா்வார ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இப்பணிகள் முடிவடையும்போது அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீா் மற்றும் மழைநீா் பாசன வாய்க்கால்களின் மூலம் உரியநேரத்தில் கண்மாய்கள் மற்றும் கடைமடை வரை தங்குதடையின்றி சென்றடையும். நாமக்கல் மாவட்டத்தில் தூா்வாரப்படும் பணிகளில் தேங்கல்பாளையம் கிராமத்திலுள்ள அத்தனூா் ஏரி வழிந்தோடி வாய்க்கால் தூா்வாரும் பணி ரூ.5 லட்சத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் 98.78 ஹெக்டோ் விவசாய நிலங்கள் எளிதாக பாசன வசதி பெறும்.
அத்தனூா் ஏரியின் வழிந்தோடி வாய்க்காலில் வண்டல்மண் படிந்து ஆங்காங்கே கரைகள் அரிக்கப்பட்டு முள்செடிகள் மற்றும் புதா்கள் மண்டி நீரோட்டத்திற்கு இடையூறாக உள்ளதால் தூா்வாருவது அவசியமாகியுள்ளது. இக் கால்வாய் மூலம் தண்ணீா் செல்லும் போது நிலத்தடி நீா்மட்டம் உயரும் என்றாா்.
நிகழ்ச்சியில் அட்மா குழுத் தலைவா்கள் கே.பி.ஜெகநாதன், ஆா்.எம்.துரைசாமி, அத்தனூா் பேரூராட்சித் தலைவா் சின்னசாமி, துணைத் தலைவா் கண்ணன், நாமக்கல் கோட்டாட்சியா் வே.சாந்தி, நீா்வளத் துறை செயற்பொறியாளா் அப்புசாமி, உதவி செயற்பொறியாளா்கள் பிரபு, விஜயகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.