தாமலேரிமுத்தூர்: நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகள்; பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக...
ரூ.2,152 கோடி கல்வி நிதி நிறுத்திவைப்பு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
நமது நிருபர்
தேசிய கல்விக் கொள்கை (என்இபி- 2020) மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டம் ஆகியவற்றை தமிழகத்தில் அமல்படுத்தாததால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் (எஸ்எஸ்எஸ்) கீழ் வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி கல்வி நிதி நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகவும், இதை வட்டியுடன் விடுவிக்க உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை, பிஎம் ஸ்ரீ பள்ளித் திட்டம் ஆகியவற்றை அமல்படுத்தும் விவகாரத்தில் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகம் மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை எனக் கூறி, மத்திய அரசு தமிழகத்துக்குத் தரவேண்டிய ரூ.2,152 கோடியைத் தர மறுக்கிறது. ஆகவே, மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர உள்ளது எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சகத்துக்கு எதிராக தமிழக அரசுத் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பிரச்னைகளை முடிவு செய்யும் உச்சநீதிமன்றத்தின் வரம்புக்குள் வரும் அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது பிரிவின் கீழ் இந்த மனுவை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
அதன் விவரம்: சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் மத்திய அரசு தனது "கட்டாயப் பங்கை' நிறுத்தி வைத்துள்ளது. இதனால், குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தைச் செயல்படுத்த முடியவில்லை. மேலும், தமிழ்நாட்டில் 43.94 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், 2.21 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 32,701 பள்ளி ஊழியர்களின் அரசமைப்புச் சட்ட உரிமைகளை முடக்கியுள்ளது.
தமிழக அரசின் உரிமையை நிறுத்திவைப்பதன் மூலம், மாநிலம் முழுவதும் தேசிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்த மத்திய அரசு நிர்ப்பந்திக்கிறது, கட்டாயப்படுத்துகிறது. இத்தகைய நடவடிக்கை கூட்டுறவு கூட்டாட்சியின் அப்பட்டமான மீறலாகும். மேலும், கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் வாரியம் (பிஏபி) 2024, பிப்ரவரியில் நடைபெற்ற அதன் கூட்டத்தில், சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு ரூ.3,585.99 கோடியை அங்கீகரித்தது. இதில் 60:40 செலவுப் பகிர்வுத் திட்டத்தின் அடிப்படையில் ரூ.2,151.59 கோடி மத்திய அரசின் பங்காகும்.
இருப்பினும், தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் முழுமையாக ஏற்றுக்கொள்ள மறுத்து, பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையொப்பமிட மறுத்தது. இதனால், சமக்ர சிக்ஷா திட்ட நிதியில் ஒரு தவணைகூட இதுவரை விடுவிக்கப்படவில்லை.
தேசிய கல்விக் கொள்கையை முழுமையாகச் செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளிகள் முற்றிலும் ஒரு தனித் திட்டமாக இருந்தாலும், அது சமக்ர சிக்ஷா திட்டத்துடன் இயல்பான தொடர்ச்சியாகும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
2024-25 நிதியாண்டுக்கான சமக்ர சிக்ஷா நிதியை தமிழகம், கேரளம் மற்றும் மேற்கு வங்கம் தவிர அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்தத் தாமதத்தால் ஊதியம், ஆசிரியர் பயிற்சி, பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் போன்ற மாணவர் உரிமைகள், அரசுப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் உள்கட்டமைப்புக்கு வழங்கப்படும் உதவித்தொகை நடவடிக்கை சீர்குலைந்துள்ளது.
எனவே, 1.5.2025 முதல் உத்தரவு நிறைவேற்றப்படும் தேதி வரை, அசல் தொகையான ரூ.2,151.59 கோடியுடன் ஆண்டுக்கு 6 சதவீத வட்டி சேர்த்து ரூ.2,291.30 கோடியை மத்திய அரசு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே முறையான எழுத்துபூர்வ ஒப்பந்தம் இல்லாததால், தேசிய கல்விக் கொள்கை, பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டம் ஆகியவை தமிழ்நாட்டைக் கட்டுப்படுத்தாது என்று அறிவிக்க வேண்டும்.
சமக்ர சிக்ஷா திட்ட நிதியை தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம் ஸ்ரீ திட்ட அமலாக்கத்துக்கு மத்திய அரசு நிபந்தனையுடன் இணைப்பது அரசமைப்புக்கு எதிரானது, தன்னிச்சையானது மற்றும் சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.